நடிகர் விவேக் மறைவு திமுக வேட்பாளர் இர்ங்கல்!!!
கோவை: "தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகரும், தமிழ்த் திரையுலகினராலும், திரைப்பட ரசிகர்களாலும் சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் திரு.விவேக் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
தனது நகைச்சுவை நடிப்பால் மக்களை சிந்திக்க வைத்து, சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக தன்னுடைய ஆளுமையை கோலோச்சியவர். தன்னுடைய நடிப்போடு மட்டுமல்லாமல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் தடை, கொரோனா பற்றிய விழிப்புணர்வு போன்ற சமூகப் பணிகள் மூலம் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்ததுடன் தனது சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சமூக ஆர்வலர்.
மேலும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஐயா திரு. ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் கனவை நினைவாக்கும் வகையில் 'பசுமை கலாம்' என்ற அமைப்பின் மூலம் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக கொண்டு, அதனை தீவிரமாக செயல்படுத்தி வந்தவர்.
தனது ஈடு இணையற்ற கலைச் சேவையாலும், சமூக சேவையாலும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நடிகர் திரு.விவேக் அவர்களின் மறைவு, தமிழ் திரைப்படத் துறைக்கும், ரசிகப் பெருமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவரது நடிப்பு மற்றும் சமூக சேவை என்றென்றும் நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவரது மரங்களும், நகைச்சுவைகளும், சமூக சிந்தனைகளும் என்றும் நம்முடன் வாழும்.! இவரை நினைவு கூரும்." என கோவை கவுண்டம்பாளையம் திமுக வேட்பாளர் இரங்கலை தெரிவித்துள்ளார்!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், தொண்டாமுத்தூர்.
Comments