13 மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும், வானிலை ஆய்வு மையம் தகவல்!!

 

-MMH

          தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்திரி வெயில் முடிந்தாலும் கோடை வெயில் கடுமையாக மக்களை தாக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

முழு ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கியிருந்தாலும் அவர்களை வெயில் விடுவதாக இல்லை. கடந்த சில நாட்களாக வெயில் மண்டையை பிளக்கும் அளவுக்கு கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதிகபட்சமாக, மதுரை, வேலூரில் தலா 106 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.

கடலூா், திருச்சியில் தலா 104 டிகிரி, சென்னை மீனம்பாக்கத்தில் 102 டிகிரி, கரூா் பரமத்தி, சேலத்தில் தலா 101 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், நாகப்பட்டினம், நாமக்கல்லில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது. இதுதவிர, புதுச்சேரியில் 102 டிகிரி வெப்பநிலை காணப்பட்டது.

இதனிடையே வெப்பநிலை உயரும் என்று சென்னை சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார். மேற்கு-வடமேற்கு திசையில் இருந்து தமிழகத்தை நோக்கி வட காற்று தொடா்ந்து வீசுகிறது. இதனால், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.   

இதேநிலை வரும் இரண்டு நாள்களுக்கு நீடிக்கும். குறிப்பாக, தமிழகத்தில் மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என அவர் தெரிவித்தார்.

-சுரேந்தர்.

Comments