தீவிரமாகும் கொரோனா 2-வது அலை! தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்! புதிய சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு காத்திருக்கும் சவால்கள்!!

    -MMH

தமிழகத்தில் தற்போதைய நிலையில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு26 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளால் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் படுக்கை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு உள்ளது.

தனியார்மருத்துவமனைகளில் பதிவு செய்து2, 3 நாட்களுக்கு பிறகே படுக்கைகள்கிடைக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்காக நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். தீவிர தொற்றால் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டவர்களும், நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களும் படுக்கைகள் கிடைக்காமல் ஆம்புலன்ஸிலேயே உயிரிழக்கும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடக்கின்றன. தமிழகத்தில் தினசரி உயிரிழப்பு 200-ஐ நெருங்கிவிட்டது. படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இருப்பதால் தீவிர தொற்று பாதிப்பு மற்றும் ஆக்சிஜன் வசதி தேவைப்படுவோர் மட்டும்அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். மற்றவர்கள் வீடுகள்,கண்காணிப்பு மையங்களில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

தீவிர தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவர்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் தினமும் உற்பத்தி மற்றும் டெண்டர் மூலம் தனியார் நிறுவனத்திடம் இருந்து 400 டன் ஆக்சிஜன் கிடைக்கிறது. இதில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு 60 டன் அனுப்பப்படுகிறது. தமிழக அரசு மருத்துவமனைகளில் கடந்த மாதம்தினமும் 250 டன்னாக இருந்த ஆக்சிஜன் பயன்பாடு, தற்போது 475 டன்னாக அதிகரித்துள்ளது.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு, வேலூர்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 பேரும், சமீபத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 13 பேரும் இறந்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யாவிட்டால் உயிரிழப்பு அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 5 ஆயிரம் மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்துக்கு தேவையான கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து அனுப்பி வருகிறது. இதுவரை தமிழகத்துக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள 72 லட்சம்தடுப்பூசிகளில் 63 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 8 லட்சம் தடுப்பூசிகள் வீணாகியுள்ளன. சில தினங்களுக்கான சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் தடுப்பூசிக்கும் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. வரத்து குறைவால், கோவாக்சின் எங்கும் கிடைப்பதில்லை. பல மையங்களில் தடுப்பூசி போடப்படாததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். முதல் தவணை போட்டுக்கொண்ட 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 2-ம் தவணை போட முடியாமல் உள்ளனர்.

இதற்கிடையில், மத்திய அரசின் அறிவிப்பின்படி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கடந்த மே 1 முதல் தடுப்பூசி போடதிட்டமிடப்பட்டது. தமிழக அரசு 1.50 கோடிதடுப்பூசிகளுக்கு ஆர்டர் செய்தது. ஆர்டர் செய்த தடுப்பூசிகள் வராததால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படவில்லை. இந்த பணி எப்போது தொடங்கப்படும் என்பதே கேள்விக்குறியாகவே உள்ளது.

கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் உள்ளிட்ட பல மருந்துகள் தரப்படுகின்றன. தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ரெம்டெசிவிர் தேவையும் அதிகமானது. அதனால், மருந்தை பதுக்கிவைத்து கள்ளச்சந்தையில் விற்பதும் பரவலாக நடக்கிறது. கள்ளச்சந்தையில் மருந்து விற்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கப்பட்டது.

நோயாளிகளின் குடும்பத்தினர் உரிய ஆவணங்களுடன் வந்து மருந்தை வாங்கிச் செல்கின்றனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து 2 நாட்கள் வரை காத்திருந்து மருந்தை வாங்கிச்செல்கின்றனர். கூடுதல் கவுன்ட்டர் அமைத்து 24 மணி நேரமும் மருந்து விற்பனை செய்ய வேண்டும். அனைத்து மாவட்டங்களில் மருந்து விற்பனை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர். இந்த சூழலில், சுகாதாரத் துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார். அவர் சென்னை மேயராக இருந்தவர் என்பதால், சென்னையின் கட்டமைப்பை முழுவதுமாக தெரிந்து வைத்துள்ளார். ஆனால், சுகாதாரத் துறை அவருக்கு புதியது.

தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறை கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். முன்னதாக, உயிரிழப்புகளை தடுக்க மருத்துவமனைகளில் படுக்கை, ஆக்சிஜன் வசதிகளை அதிகரிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் தட்டுப்பாடின்றி தடுப்பூசி சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா வைரஸின் போக்கை மருத்துவ நிபுணர்களாலேயே சரியாக கணிக்க முடியாத சூழலில், இந்தமாபெரும் சவால்களுக்கு மத்தியில்சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் மா.சுப்பிரமணியன். மேயராக பணியாற்றியது போலவே, இந்த பொறுப்பையும் அவர் திறமையாக எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

-பாலாஜி தங்கமாரியப்பன, சென்னை போரூர்.

Comments