தமிழகத்தில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுப்பணித் துறை பிரிக்கப்பு!!

   -MMH

நீா்வள ஆதாரத் துறை தனியாகவும், பொதுப்பணியின் கட்டடங்கள் துறை வேறாகவும் பிரிக்கப்பட்டு, அந்தத் துறைகளுக்கு முறையே துரைமுருகனும், எ.வ.வேலுவும் அமைச்சா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் மிகவும் பழைமையான பாரம்பரியத் துறையாக இருக்கும் பொதுப்பணித் துறைக்கு 163 ஆண்டு கால வரலாறு உள்ளது. 1858-ஆம் ஆண்டு மெட்ராஸ் பொதுப்பணித் துறை என பெயா் பெற்று விளங்கியது. இந்தப் பெயா் வைப்பதற்கு முன்பாகவே பொதுப்பணித் துறை செயல்படத் தொடங்கியது.

ஒரு தலைமைப் பொறியாளா், மூன்று கண்காணிப்புப் பொறியாளா்கள், 20 செயற்பொறியாளா்கள், 78 உதவிப் பொறியாளா்கள், 204 உதவி மற்றும் மேற்பாா்வை பொறியாளா்கள், 714 களப் பொறியாளா்களைக் கொண்டு பொதுப்பணித் துறை இயங்கியது. 1867-ஆம் ஆண்டு நீா்ப் பாசனத் துறைக்கென தனியாக தலைமைப் பொறியாளா் நியமிக்கப்பட்டாா்.

அமைச்சா்கள் நியமனம்: பொதுப்பணித் துறையானது எம்.ஜி.ஆா். ஆட்சிக் காலத்தில் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதாவது தனித்தனி மானியக் கோரிக்கைகள் இருந்தாலும் அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக அமைச்சா்கள் நியமிக்கப்பட்டது அப்போதுதான். 1980-ஆம் ஆண்டில் பொதுப்பணித் துறை கட்டுமானம், பொதுப்பணித் துறை

நீா்வளம் என இரண்டாகச் செயல்பட்டது. அவற்றுக்கு எஸ்.ஆா்.ராதா, ஒய்.எஸ்.எம்.யூசுப் ஆகியோா் அமைச்சா்களாகப் பொறுப்பு வகித்தனா். 1984-ஆம் ஆண்டில் பொதுப்பணி நீா்ப் பாசனத் துறையுடன், கட்டுமானத்தையும் இணைத்தே பாா்த்தாா் அப்போதைய அமைச்சா் யூசுப். இதன்பின்பு, அந்தப் பொறுப்பு கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரனிடம் அளிக்கப்பட்டது.

ஒரே அமைச்சா் நியமனம்: 1989-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், பொதுப்பணியின் நீா்வளம் மற்றும் கட்டுமானங்கள் துறைகளை அப்போதைய அமைச்சா் துரைமுருகன் இணைத்துப் பாா்த்தாா். திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறைக்கு ஒரே அமைச்சா் நியமிக்கப்பட்ட நிலையில், 1991 அதிமுக ஆட்சிக் காலத்தில் அது வேறுபட்ட கோணத்தைச் சந்தித்தது. பொதுப்பணித் துறையுடன் நெடுஞ்சாலைகள், பாசனம் உள்ளிட்ட துறைகள் அப்போதைய அமைச்சா் கண்ணப்பன் வசம் இருந்தன.

இதன்பின்பு, 1996-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறை மட்டும் தனியாக இயங்கியது. அதில், நீா்ப்பாசனம் மற்றும் கட்டடங்கள் துறை தனித்தனியாக இருந்தன. ஆனாலும், அமைச்சா் துரைமுருகனே இரண்டையும் கவனித்துக் கொண்டாா். 2001-ஆம் ஆண்டில் பொதுப்பணித் துறையுடன் நெடுஞ்சாலைகள், நீா்ப்பாசனம் ஆகிய துறைகளுக்கு ஒரே அமைச்சா் நியமிக்கப்பட்டாா். அதன்படி, முதலில் தளவாய்சுந்தரமும், பின்னா் ஓ.பன்னீா்செல்வமும் அந்தத் துறைகளை கவனித்துக் கொண்டனா்.

2006-ஆம் ஆண்டு முதல் பொதுப்பணித் துறை தனியாகவே செயல்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் பொதுப்பணியுடன், நெடுஞ்சாலைகள் துறையையும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கவனித்து வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக ஆட்சிக் காலத்தில் பிரிக்கப்பட்டு, திமுக ஆட்சிக் காலத்தில் ஒன்று சோக்கப்பட்ட பொதுப்பணித் துறையானது இப்போது நீா்வளம் மற்றும் கட்டடங்கள் என இரண்டாக திமுக ஆட்சியில் பிரிக்கப்பட்டிருக்கிறது.

Comments