'5ஜி' கொரோனாவுக்குக் காரணமா? சென்ற ஆண்டு லண்டன்! இந்த ஆண்டு இந்தியா!

 

-MMH

           உலகம் முழுக்க சில செய்திகள் குறிப்பிட்ட நேரங்களில் தீயாகப் பரவி எவ்வளவு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன என்பதற்கு, கொரோனாவுக்கும் 5ஜி தொலைத்தொடர்பு டவர்களுக்கும் உள்ள ஒற்றுமையே சாட்சி. கொரோனா கடந்த 2020 ஆம் ஆண்டு மேலைநாடுகளில், குறிப்பாக இங்கிலாந்தில் மிகத் தீவிரமாக பரவியபோது, 5ஜி தொலைத்தொடர்பு டவர்களால் கொரோனா பரவுவதாக ஒரு தகவல் அங்கே தீவிரமாகப் பரவியது. இதை நம்பி இங்கிலாந்தில் ஆங்காங்கே 5ஜி தொலைத்தொடர்பு டவர்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

இப்போது இதே வதந்தி, ஒரு வருடம் கழித்து இந்தியாவில் பரவிக் கொண்டிருக்கிறது. உத்திரப்பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவலுக்கு 5ஜி டவர்களே காரணம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் தீயாகப் பரவியது. 5ஜி சோதனை ஆங்காங்கே மேற்கொள்ளப்படுவதால் அதன் கதிரியக்கத்தின் காரணமாக கொரோனா இரண்டாம் அலை பரவுகிறது என்று பஞ்சாப், சண்டிகரிலும் பலமாக விவாதங்கள் எழுந்தன.

இதுகுறித்து செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தினர் ஹரியானா மாநில தலைமைச் செயலாளர் விஜய் வர்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நாட்டில் இன்னும் எங்கும் 5ஜி சோதனைகள் தொடங்கவில்லை. அரசாங்கம் அனுமதிதான் கொடுத்திருக்கிறது. ஆனால், அதற்குள் 5ஜி சோதனைகளால்தான் கொரோனா வைரஸ் பரவுகிறது, இறப்பு எண்ணிக்கை அதிகமாகிறது என்ற தகவல்கள் பரவி வருகின்றன. இவற்றை ஹரியானா அரசு தடுத்து நிறுத்த வேண்டும்”என்று கோரியிருந்தனர்.

இந்நிலையில் மே 19 அன்று இது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்புத்துறை ஒரு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. அதில் “ஐந்தாவது தலைமுறை 5ஜி செல்பேசி கோபுரங்களின் சோதனையால் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் பரவியிருப்பதாக தவறான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவுகின்றன. இந்தத் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. 5ஜி தொழில்நுட்பத்திற்கும் கொரோனா தொற்றின் பரவலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்வதுடன், இதுபோன்ற தவறான தகவல்களை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இதுபோன்ற புரளிகளுக்கு எந்த விதமான அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை. மேலும் 5ஜி இணைப்பின் சோதனை இன்னும் இந்தியாவில் எங்கும் தொடங்கப்படவில்லை. எனவே இதுபோன்ற கூற்றுகள் முற்றிலும் பொய்யானவை” என்று தெரிவித்துள்ள தொலைத் தொடர்புத்துறை மேலும், “செல்பேசி கோபுரங்களில் இருந்து வெளிவரும், அயனிகளை உருவாக்காத ரேடியோ அலை வரிசையில் மிகக் குறைந்த அளவிலான ஆற்றலே இருப்பதால், மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களின் உயிரணுக்களில் இதனால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. ரேடியோ அலைவரிசையின் வெளியேற்றத்திற்கு தொலைத்தொடர்புத் துறை நெறிமுறைகளை வகுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின் பேரில் அயனிகளை உருவாக்காத கதிர்வீச்சு பாதுகாப்புக்கான சர்வதேச ஆணையம் வகுத்துள்ள பாதுகாப்பு வரம்புகளை விட இது 10 மடங்கு கடுமையானதாகும்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த நெறிமுறைகளை முறையாக பின்பற்றும் வகையில் தொலைத்தொடர்புத் துறை சிறந்த செயல்முறைகளை பின்பற்றுகிறது. எனினும் செல்பேசிக் கோபுரங்கள் பாதுகாப்பு வரம்பிற்கும் அதிகமாக ரேடியோ அலைகளை வெளியேற்றுவதாக சந்தேகம் இருந்தால், https://tarangsanchar.gov.in/emfportal என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தங்களது ஐயங்களை தெரிவிக்கலாம்”என்றும் கூறியுள்ளது.

-பாரூக்.

Comments