பொதுமக்கள் அலட்சியமாக இருக்க கூடாது.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது ராதாகிருஷ்ணன் தகவல்.!!

 

-MMH

          தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இனிமேல்தான் பொதுமக்கள் அலட்சியாக இருக்காமல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னையை அடுத்த குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் 50 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த படுக்கை வசதி போதுமானதாக இல்லாததால் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தனியார் பங்களிப்பு மற்றும் ஆஸ்பத்திரி உதவியுடன் கூடுதலாக 150 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று மதியம் ஆய்வு செய்தார்.

அப்போது செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ், பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பழனிவேல் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய பூரண சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் குறைந்து வருகிறது. கொரோனா தாக்கம் குறைகிறது என்பதால் மிகுந்த அலட்சியத்துடன் இருக்காமல் இந்த நேரத்தில்தான் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த முழு ஊரடங்கை பயன்படுத்தி முற்றிலுமாக கொரோனாவை ஒழிக்க வேண்டும்.

முழு ஊரடங்கு இருந்தும் தமிழகத்தின் சில பகுதிகளில் பொதுமக்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிப்பவர்கள் வெளியே சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறார்கள். அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது என அரசு அறிவுறுத்திய அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததால்தான் இந்தியாவில் கொரோனா 2-வது அலை உருவானது.

கருப்பு பூஞ்சை நோயானது கொரோனாவுடன் ஒப்பிடத்தக்கதுதான். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 458 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்காக முதல்-அமைச்சரால் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, இந்த கருப்பு பூஞ்சை என்பது பல ஆண்டுகளாக இருக்கக்கூடிய ஒரு நோய். சர்க்கரை நோய் மற்றும் ஸ்டீராய்டு பயன்படுத்துபவர்களுக்கு இந்த கருப்பு பூஞ்சை நோய் வருவதற்கான சாத்தியம் அதிகம்.

எனவே சர்க்கரை நோய் உள்ள நோயாளிகள் கருப்பு பூஞ்சை வராமல் இருப்பதற்கு அவர்களின் சர்க்கரை அளவை சரியாக சீராக வைத்துக்கொள்ள அறிவுறுத்தி உள்ளது. எந்தெந்த மாவட்டத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் தனித்தனியாக வகைப்படுத்தி கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

-வேல்முருகன் சென்னை.

Comments