வெறும் மெஷினை இயக்கிப் பார்த்துட்டு இருக்கோம்!” – செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தின் பரிதாப நிலை.

     -MMH

     'கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது' என்றொரு பழமொழி உண்டு. கோவிட்-19 தொற்று நோயின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் தடுப்பூசிதான் கலங்கரை விளக்கமாகக் கண்ணுக்குத் தெரிகிறது. கோவிட்-19 மட்டுமல்ல உலகில் பல்வேறு நோய்களைத் தடுப்பதற்கும் தடுப்பூசிதான் ஒற்றை ஆயுதமாக உள்ளது.

தற்போது தடுப்பூசிக்கான தேவை அதிகரிக்கு வரும் நிலையில், தமிழகத்தில் சுமார் ரூ.600 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி உற்பத்தி மையம் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக ஒரு தடுப்பூசியைக்கூடத் தயாரிக்காமல் வெறும் கட்டடமாக நின்றுகொண்டிருக்கிறது. சென்னையை அடுத்த செங்கல்பட்டில் அமைந்துள்ளது ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையம். 2012-ம் ஆண்டு மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்தபோது, மத்திய அரசின் 100 சதவிகித மானியத்துடன் இந்த மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கின

தமிழக அரசின் சார்பில் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மத்திய அரசின் சார்பில் ரூ.594 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2017-ம் ஆண்டில் கட்டுமானப் பணிகள், மெஷின்கள் நிறுவுவது என அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தன. இந்த நிறுவனமானது மத்திய சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் ஹெச்.எல்.எல் லைஃப்கேர் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஹெச்.எல்.எல் பயோடெக் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது

இந்த நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு மத்திய அரசு முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் அதற்காக நிதி ஒதுக்காமல் இழுத்தடிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

``தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்தும் அவசர அவசியம் உள்ளது. செங்கல்பட்டில் இருக்கும் இந்துஸ்தான் பயோடெக் என்ற அரசு நிறுவனத்தை இதற்காகப் பயன்படுத்த மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். ஆனால், மத்திய அரசு இது உட்பட 4 பொதுத்துறை நிறுவனங்கள் எதையுமே பயன்படுத்தவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

அந்நிறுவனத்தின் நிலை தற்போது எப்படி இருக்கிறது என்று அறிந்துகொள்ள அந்நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவர் விநாயக மூர்த்தியிடம் பேசினோம்.

``இந்த மையத்தில் 215 பேர் பணியில் இருந்தனர். தற்போது வெறும் 95 பேர்தான் பணியாற்றுகின்றனர். பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லை. பத்தாயிரம் ரூபாய் ஸ்டைஃபன்ட் மட்டுமே வழங்கப்படுகிறது.

அங்கிருக்கும் உபகரணங்கள், கருவிகள் அனைத்தும் செயலிழந்து, துருப்பிடித்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு ஷிஃப்ட்டுக்கு நான்கு முறை அதையெல்லாம் இயக்கிப் பார்க்கிறோம். தினமும் இந்த வேலை மட்டும்தான் நடைபெறுகிறது. நிச்சயம் நிதி ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையிலும் அதைக் கைவிட்டுவிட்டால் மீண்டும் இதைப் போன்று உருவாக்குவது சிரமம் என்பதாலும் அதை இயக்கிக் கொண்டே இருக்கிறோம் அங்கு பணிபுரிவோர் தெரிவித்தனர்.

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.

Comments