ஆபாச பாடம் எடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது : புதிய நம்பிக்கை தரும் என எழுத்தாளர் ஈரோடு கதிர் கருத்து !!

 

-MMH

எழுத்தாளர் ஈரோடு கதிர் கண்டன பதிவு: 

குறிப்பாக பள்ளிகளில் நிகழ்ச்சிகள் முடிந்ததும், பெரும்பாலும் மாணவர்கள் விட்டால் போதுமென ஓடிவிடுவார்கள். மிக அரிதாகவே மாணவர்கள் ஏதாவது சொல்வார்கள், கேட்பார்கள். ஆனால் மிகக் கணிசமாக பெண்கள் வரிசைகட்டி நிற்பார்கள். நிகழ்ச்சி முடிந்ததும், 'எல்லாரும் வரிசையா க்ளாஸ் ரூமுக்குப் போங்க!’ என நிர்வாகம், ஆசிரியர்கள் வழக்கமான ஒரு ஒழுங்கினைக் கடைப்பிடிப்பார்கள். அதுவே மிக எளிதாக அவர்களை அந்த அரங்கைவிட்டு வெளியே இழுத்துத் தள்ளிவிடும். அதையும் தாண்டி, சில நேரங்களில் 'சார்ட்ட பேசிட்டு வந்துடுறேன்' என்று ஆசிரியர்களிடம் அனுமதி பெற்று வருவார்கள். 

அப்படி வர முடிவெடுத்ததில் பெரும் தடுமாற்றம் இருந்திருக்கும். எல்லோரும் வெளியேறிக் கொண்டிருக்கும்போது நாமும் போய்டலாமா அல்லது இருந்துட்டு போலாமா எனும் தடுமாற்றத்தில் போகாமல் இருப்பதே பெரிய சாதனைதான்.  அப்படிக் காத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் முகம் இறுகியிருக்கும். 

சிலர் தன் படிப்பு குறித்து, அம்மா-அப்பா யாரோ ஒருவரின் இழப்பு குறித்து, அப்பாவின் மதுப்பழக்கம் குறித்து, குடும்பப் பொருளாதாரம் குறித்து, வீட்டில் அடிக்கடி நடக்கும் சண்டை குறித்து, அங்கத்தில் குறைபாடு இருந்தால் அது குறித்து என்று ஏதோ ஒன்றை இறக்கி வைக்க முயல்வார்கள். 

அப்படிக் காத்திருக்கும் வரிசையில் சில நேரங்களில் ஓரிரு மாணவிகள், மற்றவர்களை முன் நகர்த்தி தன்னை இறுதியாக நிறுத்திக் கொள்வார்கள். மற்றவர்களிடம் பேசிக் கொண்டே அவர்களின் தடுமாற்றம், பின் நகர்வுகளைக் கவனிக்கத் தவறுவதில்லை. அவர்கள் ஏதோ ஒரு கனத்தை இறக்கிவைக்கப் போகிறார்கள். எதிர்கொள்ளத் தயாராக இரு என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்.

இறுதியாக வரும் அந்த மாணவியின் கண்கள் நிரம்பியிருக்கும் அல்லது கண்ணீர் தாரை ஓடிக் கொண்டிருக்கும். அன்றுதான் சில மணி நேரத்திற்கு முன்புதான் என்னை நிகழ்ச்சியில் சந்தித்திருப்பார்கள். அந்த இரண்டு மூன்று மணி நேரத்தில் ஏதோ ஒரு நம்பிக்கை, தைரியம் வந்திருக்கும். அதற்கு பயிற்சியின் இடையே சில காரணங்களுக்காக பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் ஈர்ப்புகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, சரியானவர்களிடம் தேவையான உதவி, ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என நான் குறிப்பிடுவதும் ஒரு காரணமாக இருக்கலாம். 

ஆசிரியர், சித்தப்பா, மாமா, உறவுக்காரர் என பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதைத் தடுமாறித் தடுமாறி கதறலோடு சொல்வார்கள். ’யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க!’ என்பதை ஏறத்தாழ சத்தியமாக வாங்கிக் கொள்வார்கள். அவர்கள் குடும்பத்தில் தெரிவிக்க ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். நிர்வாகத்திடம் அல்லது பொறுப்பான ஆசியரிடம் தெரிவித்து அதன்பின் பாதுகாக்கவே முயற்சிகள் எடுக்க முடிந்தது. இந்த அனுபவங்கள் எல்லாமே ஓரளவு கிராமப்புறம் மற்றும் சிறு நகரம் சார்ந்த பள்ளிகளில். பெரு நகரங்களில் இப்படியெல்லாம் வெளிப்படுத்த முன்வந்ததில்லை. ஒருவேளை பிரச்சனைகள் ஏதேனும் இருந்திருந்தாலும் அவர்களே கையாண்டிருக்கலாம்.

சென்னை PSBB பள்ளி மாணவ மாணவிகள் ஏன் இத்தனை காலம் பொறுமை காத்தார்கள் என்பது அயர்ச்சியாக உள்ளது. இப்பொழுதேனும் இது சமூக வலைதளங்கள் மூலமாக வெளிவந்தது சற்று ஆசுவாசம் தருகின்றது. 

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலை காவல்துறை விரைந்து போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்திருப்பது, இதுபோல் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவரும் பிள்ளைகளுக்கு நம்பிக்கை தரும். இங்கு சாதி மதம் என்று எதுவும் பாராது துன்புறுத்தல்கள் செய்யும் மனித கொடூரர்களை கடுமையாக எதிர்ப்போம், பாதிக்கப்படும் பிள்ளைகளின் பக்கம் எப்போதும் உறுதுணையாக நிற்போம். 

-தொகுப்பு : ஆர்.கே.பூபதி.

Comments