விவேக் வைத்த மரக்கன்றுகள் வனத்தில் செண்பகப்பூ பூத்தது!!

   -MMH

கோவையில் நடிகர் விவேக் துவக்கி வைத்த, எஸ்.பி.பி., வனம் பூங்காவில் நடப்பட்ட மரக்கன்றுகள், நான்கு மாதங்களில் நன்கு வளர்ந்து, துளிர்த்துள்ளன. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவாக, 'சிறுதுளி' அமைப்பு மற்றும் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி இணைந்து, கோவை பச்சாபாளையம் ஆபீசர்ஸ் காலனி வளாகத்தில், எஸ்.பி.பி., வனம் உருவாக்கின. 

அவரது வயதை குறிப்பிடும் வகையில், 74 மரக்கன்றுகள், இசை குறியீடு வகையில் நடப்பட்டன. மிக முக்கியமாக, இசை கருவிகள் தயாரிக்க பயன்படுத்தும் மரங்களின் வகைகள் மற்றும் ஸ்தல விருட்ச மரக்கன்றுகள் மட்டுமே நடப்பட்டன. சமீபத்தில் மறைந்த நடிகர் விவேக், இவ்விழாவில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று, மரக் கன்றுகள் நட்டதோடு, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, மக்கள் மத்தியில் வலியுறுத்தினார்.

அவர் துவக்கி வைத்த, எஸ்.பி.பி., வனம் பூங்காவில் நடப்பட்ட மரக்கன்றுகள், நான்கு மாதங்களில் நன்கு வளர்ந்து, ஆரோக்கியமாக இலைகள் துளிர்க்க ஆரம்பித்துள்ளன. வழக்கமாக, செண்பகப்பூ, செப்டம்பர் மாதங்களில் பூக்கும். ஆனால், மரக்கன்று நட்ட, நான்கே மாதத்தில், விவேக் மறைந்த மூன்றாவது நாளில், செண்பகப்பூ மலர்ந்தது. இது, அப்பகுதி மக்களிடமும், 'சிறுதுளி' அமைப்பினரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

அனஸ் .

V. ஹரிகிருஷ்ணன்.

Comments