ஆக்சிஜன் ப்ளீஸ்’.. வீதியில் இறங்கிய செங்கல்பட்டு அரசு மருத்துவர்கள் – என்ன நடக்கிறது!!

   -MMH

சென்னை: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக் குறையை தீர்க்க வேண்டும் என்று மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா 2வது அலை பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு, ரெமிடிசிவிர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தலைநகர் டெல்லிக்கு குஜராத்தில் இருந்து ரயில் மூலம் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டுள்ளன. தமிழகத்திலும், கடந்த சில நாட்களாக பல இடங்களில், படுக்கை வசதி தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதை காண முடிகிறது. தலைநகர் சென்னையிலேயே ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்கிறது. பலருக்கும் ஆம்புலன்ஸிலேயே சிகிச்சை அளிக்கப்படுவதையும் காண முடிகிறது.

இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு 13 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இரவு பத்து மணி முதல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து 5 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்பட்ட போதும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்தது.

சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன்பின் அவர் கூறுகையில், 'மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்ஸிஜன் கையிருப்பில் இருந்தது. ஆகையால், ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. 40 வயதிற்கு உட்பட்டோர் 5 நபர், 80 வயதுக்கு மேற்பட்டோர் 2 பேர், 8 ஆண்கள், 5 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் இறந்துள்ளனர். நேற்று அனுமதிக்கப்பட்டவர்களில் மட்டும் 7 பேர் இறந்துள்ளனர். இறந்த 13 பேரில் 12 பேர் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இறந்த அனைவரும் வயது மூப்பு, கோமா என்ற வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். 13 பேரில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாஸிட்டிவ். மற்ற அனைவருக்கும் நெகட்டிவ் தான் எனினும், இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். தவறு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்' என்றார்.

இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக் குறையை தீர்த்து நோயாளிகளுக்கு தேவயான ஆக்சிஜன் வசதியை மேம்படுத்திட வேண்டும் என்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எண்ணிக்கை உயர்த்திட வேண்டும் என மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.

Comments