கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்!!

 

-MMH

    கோவை தொண்டாமுத்தூரை அடுத்த வண்டிக்காரனூரில்  நேற்று முன்தினம் இரவு ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்துவதாக தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வாகனத்தில் அரிசி மூட்டையை ஏற்றிக்கொண்டு இருந்தவர்களிடம், விசாரணை செய்தனர்.முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால்  ரேஷன் அரிசி மூட்டை ஏற்றப்பட்ட வாகனத்துடன்  மூவரையும், போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.

விசாரணையில், அவர்கள் வேலந்தாவளத்தை சேர்ந்த ராஜேஷ், 24, வல்லரசு, 21, கமலேஷ், 19 என்பதும், தேவராயபுரம், குப்பேபாளையம், வண்டிக் காரனூர் ஆகிய பகுதிகளில் இருந்து, ரேஷன் அரிசியை எடுத்துச்சென்று, கேரளாவிற்கு கொண்டு சென்று விற்க முயன்றதும் தெரியவந்தது. மூவரையும் கைது செய்து, 2.5 டன் ரேஷன் அரிசியுடன் இருந்த, கேரள மாநில பதிவு எண் கொண்ட வாகனம் மற்றும் இரு சக்கர வாகனத்தை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments