இயற்கையை நேசிக்கும் தோடர்கள் வாழ்க்கை..!! சொற்சித்திரம் தீட்டிய கவிதாயினி அமுதா பொற்கொடி !!

 

-MMH

                                                நெல்லை கவிதாயினி அமுதா பொற்கொடி

நெல்லை மாவட்டம் ஆலடிப்பட்டி தான் கவிதாயினி அமுதா பொற்கொடி பிறந்த கிராமம். ஆன்மீகம் வளர்த்த பெரியோர் வைத்திலிங்க பூசாரி பத்ரகாளியம்மாள் பரம்பரை வழிவந்தவர். வை.வைகுண்டம், சந்திரா தம்பதியரின் அன்பு மகள். கவிதாயினி அமுதா பொற்கொடி கணவர் மருத்துவர் சித்ரகுமார் அரசு மருத்துவர். 

கவிதாயினி அமுதா எழுதி, வானதி பதிப்பகம் வெளியிட்ட அகச்சுவடுகள், கவிதை நூலுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வழங்கிய அணிந்துரையில் கவிஞர் அமுதாவின் கவிப்பயணம் வெல்லட்டும் ! என வாழ்த்தியுள்ளது கவிதாயினிக்கு கிடைத்த பெரும் வரம்.

               நீலகிரியில் தோடர்கள் இன பெண்ணுடன் கவிதாயினி அமுதா பொற்கொடி

எதையும் நுட்பமாக பார்க்கும் கவிதாயினி, நீலகிரி தோடர்கள் வாழ்விடத்துக்கு தான் நேரில் பார்த்ததை, உணர்ந்ததை அப்படியே வடித்துள்ளார். கண்டிப்பான பள்ளி நிர்வாகியான இவர் பாசத்தாய் என்பது அவரது பள்ளி பிள்ளைகளுக்கு மட்டுமே தெரியும் !

தொடரட்டும் இந்த தோடர்கள் வாழ்க்கை....!

பனியில் நனைந்த பச்சை எழில்மகள்

பகலவன் இச்சைக்கு இடம் கொடாமல்

மேனியை உச்சத்தில் தொடாமல் மறைக்க

பாலாடை வெண்முகிலை கச்சையாய் கட்டி 

கூச்சத்தில் நாணி நெலிந்தது  வளைந்து 

பச்சைமலை நீலகிரியாய் பூச்சக்கரம் மீதமர்ந்தாள்...

அள்ளி அவள் அழகைப் பருகி பருகி 

அயர்ந்திடவில்லை ஆவலில் கண்கள்...

துள்ளி எங்கும் சுற்றித் திரிந்து 

துவண்டிடவில்லை  சதிர் பாதங்கள்...

தள்ளி அகன்றிட மனமின்றி தவமாய் தனிமையில் நின்றேன்....

உள்ளிருந்து எங்கோ குரலொன்று ஒலித்தது....

சில்லென்ற சாரலிடை சொல்வந்த திசை நோக்கினேன்

சில்லொத்த தோடர் நங்கை ஒருத்தி அருகி 

சன்னமாய் பூமாதேவியானென புன்னகைத்துப் பகர்ந்தாள்

வாழிடம் மந்துவில் வார்த்திதாஸ் வீட்டிற்கு வணக்கத்துடன் வரவேற்பும் நல்கினாள்

                          பழமையையும் பண்பாட்டையும் நினைவூட்டும் தோடர்கள் வாழ்விடங்கள்

அன்பை மட்டுமே பரிசாய் ஏற்று

ஆலயமும் உடன்அழைத்துச் சென்றாள்

அடுக்கிய கருங்கற்களால் அரைவட்ட வடிவில்

தேக்கீஸ் அம்மனின் பல்வாஷ் அருட்கூடம்

அர்ச்சகர் மட்டுமே குனிந்து நுழையும் வாயில்

அரிய புராதன சின்னங்கள் சித்திரமாய்

எருமைத்தலை உருவமே முன்புறம் பிரதானமாய்....

அவுல் புல்லால் அடுக்காய் கட்டிய மூன்போ கோபுரம்...

ஆங்காங்கே முன்னோர்கள் நினைவு ஸ்தூபம்...

                                   கவிதாயினி அமுதா பொற்கொடியின் அகச்சுவடுகள் கவிதை நூல்.

ஆண்டு தொடக்கத்தில் ஆடவர் கூடி

அடித் தொண்டையின் கரகரத்த ஒலியில்

எருமை குரலொத்த வழிபாட்டுடன்

அழகிய பூத்துக்குளி பாரம்பரிய உடையில்

ஆடிப்பாடி ஆனந்தமாய் கொண்டாடும்

மொத்வாட் எனும் ஆலயத் திருவிழா..

பால்சோறே சிறந்த விருந்தோம்பல் உணவு

புலால் உண்பதற்கு வலுவான மறுப்பு....

பொய் களவு கொலை கொள்ளை இல்லை 

பழுதற்ற வாழ்விற்கு இயற்கையே காப்பு.....

அமானுஷ்யச் சக்திகள் மீது ஆதீத நம்பிக்கை

அடுத்தப் பிறவியில் துளிகூட இல்லை

ஆயுள் பேண பச்சிலைகள் வைத்தியம் 

ஆசிர்வதிக்க அடிதூக்கி நெற்றியில் வைக்கும் வழக்கம்...

ஆண்மையே அங்கும் அதிகார வர்க்கம் 

அடுப்பங்கரை கைவேலைகளே பெண்மைக்கு நித்தியம்

காலத்திற்கு ஏற்ப சிலக் கலாச்சாரம் மங்கினும்

காலவோட்டத்தில் பெரிதும் பின்னடைவான சமூகம்...

வலுவான வாழிடம் அமைப்பு

வருவாய் பெருக்கும் தொழில் முனைப்பு

முன்னேற்றக் கல்வி முழுதான மருத்துவ சேவை 

அனைத்திலும் தேவை அரசின் பார்வை

நிறைவேற்றினால் நிலைக்கும் தோடர்கள் வாழ்கை

பிழைக்கும் எழில் கொஞ்சும் நீலகிரி இயற்கை!

நன்றி - கவிதாயினி அமுதா பொற்கொடி

-தொகுப்பு - ஊடகவியலாளன் ஆர்.கே.பூபதி.

Comments