புத்துணர்ச்சி பெறுகிறது தமிழக காவல் துறை. புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரு.சைலேந்திரபாபு!

 

-MMH

          தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவர் திரிபாதி நாளையுடன் 30/06/2021 ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

 தமிழக காவல் துறையின், 30வது, சட்டம் -ஒழுங்கு டி.ஜி.பி.,யாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டு உள்ளார்.தற்போது, சட்டம் -ஒழுங்கு டி.ஜி.பி.,யாக பணிபுரியும் திரிபாதி, ஓய்வு பெறுகிறார். அதனால், புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பட்டியல், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், சைலேந்திரபாபு, கரன் சின்ஹா, கந்தசாமி உள்ளிட்டோரின் பெயர்கள் முன்னணியில் இருந்தன. இரு தினங்களுக்கு முன், டில்லியில், தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.,யைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் நடந்தது. இதில், மத்திய உள்துறை அதிகாரிகள், மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள், தமிழக அரசின் தலைமை செயலர், உள்துறை செயலர், தற்போதைய டி.ஜி.பி., ஆகியோர் பங்கேற்றனர்.

அதில், மூன்று பேர் அடங்கிய பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக காவல் துறையின், 30வது டி.ஜி.பி.,யாக, சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை, தலைமை செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார். சைலேந்திரபாபு, கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில், 1962 ஜூன் 5ல் பிறந்தார். வேதியியல், ஆங்கிலம் மற்றும் வணிக மேலாண்மையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர். 'சைபர் கிரைம்' தொடர்பாகவும், முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இளைஞர்களின், 'ரோல் மாடல்' என அழைக்கப்படும் சைலேந்திரபாபு, 1987ல், தமிழக பிரிவு ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்ச்சி பெற்றார். 

சேலம், தர்மபுரி மாவட்ட ஏ.எஸ்.பி.,யாக பணியைத் துவங்கிய இவர், திண்டுக்கல் மற்றும் அப்போது இருந்த செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்துள்ளார். சென்னையில், அடையாறு துணை கமிஷனர், விழுப்புரம், டி.ஐ.ஜி., மற்றும் சென்னையில் தெற்கு இணை கமிஷனர், கோவை கமிஷனர், வடக்கு மண்டல ஐ.ஜி, மாநில சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., என, பல முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். அனுபவமிக்க, ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், தீயணைப்புத் துறை மற்றும் சிறைத்துறை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். 

தற்போது, ரயில்வே டி.ஜி.பி.,யாக இருக்கிறார். இவர், கோவை கமிஷனராக இருந்த போது தான், முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில், செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. அதேபோல, பள்ளிக் குழந்தைகள் இருவரை கடத்திச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்துக்  கொன்ற  வேன் ஓட்டுனர் மோகன்ராஜ் என்பவன், 'என்கவுன்டர்' முறையில் சுட்டுக் கொல்லப்பட்டான். பணியுடன், உடற்பயிற்சி முக்கியத்துவம் குறித்து, 'வீடியோ' வாயிலாக, இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இவர் நிச்சயம் காவல் துறையில் பல புதிய மாற்றங்களையும்,  சாதனைகளையும் படைப்பார் என உறுதியாக எதிர்பார்க்கலாம்.  தமிழக காவல்துறை DGPயாகப்  பதவியேற்கவிருக்கும் திரு. சைலேந்திரபாபு அவர்களுக்கு நாளைய வரலாறு புலனாய்வு இதழ் சார்பாக நல்வாழ்த்துகளை உரித்தாக்குவது,

-சோலை. ஜெய்க்குமார்/Ln. இந்திராதேவி முருகேசன்.

Comments