நெல்லை அமுதா பொற்கொடி நூலுக்கு ஷோபனா ரவி அணிந்துரை...!! இலக்கியம் பேசுவோம் ! - ஆர்.கே.பி பக்கம்

    -MMH
    வேர்களை வருடும் விருது நூலுக்கு பிரபல செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி வழங்கிய அணிந்துரை குறித்து நம்மிடம் மெய்சிலிர்த்து பேசுகிறார், நெல்லை ஆலடிப்பட்டி கவிதாயினியும் பள்ளி தாளாளருமான அமுதா பொற்கொடி !!இதோ...படியுங்கள்..!!

“ - வேர்களை வருடும் விழுது” என்ற என் அடுத்த படைப்பிற்கு மிகச் சிறப்பான அணிந்துரை வழங்கிய தோழி திருமதி. ஷோபனா ரவி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...!!

தூர்தர்ஷன் ஒளிபரப்பு மட்டுமே இருந்த என் பள்ளி நாட்களில் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே தொலைகாட்சி முன்பு அமர்ந்த இளம் பருவத்தினரை , செய்திகளையும் கேட்க கவர்ந்திழுத்து தன் கம்பீரக் காந்தக் குரலால் கட்டிப்போட்டவர் தோழி திருமதி.ஷோபனா ரவி அவர்கள்...

அவர் வசீகரக் குரலையும் தெளிவான உச்சரிப்பையும்  மட்டுமல்ல, அவர் சாந்தமான அடக்கமான அழகையும் ரசித்த ஆயிரமாயிரம் ரசிகர்களில் அடியேனும் ஒருத்தி....

எனது அத்தான் (அக்காவின் கணவர்) சு.சமுத்திரம் அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வரும்போதெல்லாம் தோழி திருமதி.ஷோபனா ரவி அவர்களைப்பற்றி நான் விசாரிக்காத நாளில்லை....

அத்தான் , அவர்களைப்பற்றி மிகச் சிறப்பாக சொல்வார்.... அதனால் அவர்மீதான மரியாதை என்னுள் முன்பே உட்புகுந்திருந்தது....


நெல்லை ஆலடிப்பட்டி கவிதாயினியும் நூலாசிரியரும் பிரபல கல்வியாளருமான அமுதா பொற்கொடி.

பின்னாளில் எனக்கு தோழி ஆவார் என்று கனவிலும் கற்பனை செய்ததில்லை. எனக்கு முகநூல் தந்த வரப்பிரசாதம் அவர்...!!

இதுவரை நேரில் சந்தித்ததே இல்லை.... ஏன், மெசஞ்சரில் கூட பெரியதாய் பேசியதில்லை...

அவ்வப்போது அவர் ஆன்மீகம் சார்ந்த பதிவுகளால் ஈர்க்கப்பட்டேன், தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் அவர் புலமை கண்டு வியந்துபோனேன்...

அடுத்தவர் திறமைகளையும் எந்த தயக்கமும் இன்றி முழுதாய் பாராட்டும் அவர் தன்மை கண்டு அவர்மீதான மதிப்பு மென்மேலும் கூடியது.... 

தமிழகத்தின் பிரபல செய்தி வாசிப்பாளர், அணிந்துரையாளர் ஷோபனா ரவி.

என் அடுத்தப் படைப்பான “ வேர்களை வருடும் விழுது” என்ற தொகுப்பிற்கு அவர்களின் அணிந்துரை கிடைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தேன்...

ஏனென்றால் தவறாது என் முகநூல் பதிகளை முழுதாய் படித்து பொருத்தமாய் அதற்கு பின்னூட்டம் அளித்து என்னை ஊக்குவிப்பவர்..

அதனால் அணிந்துரை கேட்டு செய்தி மட்டுமே அனுப்பினேன்..

எந்த மறுப்பும் இன்றி உடனே ஒப்புதல் தந்தார்...என் ஒவ்வொரு எழுத்தையும் ஆழ்ந்து படிந்து அருமையான ஒரு அணிந்துரையும் ஒரு வாரத்தில் வழங்கினார்... அணிந்துரை மூலம் என்னையே நான் மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்....

அணிந்துரையை படிக்கும்போதே புத்தகத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்ற  ஆர்வத்தையும் வாசகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்...

நிறைவான மகிழ்ச்சி தோழி....  இது இன்னாரால்தான் நடக்கும் என்பது எழுதப்பட்ட விதி.....

சிறந்த செய்தி வாசிப்பாளராக, நான் மிகவும் இரசித்த தோழி ஷோபனா ரவி அவர்கள் என் கிறுக்கலுக்கு அணிந்துரை எழுத வேண்டும் என்பதும் ஆண்டவனின் கட்டளை போலும்...... 

அதுவே இன்று சிறப்பாக நடந்தேறியுள்ளது....இதை என் தந்தை அறிந்திருந்தால் மிகவும் பெருமிதம் கொள்வார்...  மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்  தோழி.... !!

பிரபல செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி அணிந்துரை:

தம் வீட்டாரோடு வேட்டைக்குப் போனபோது தோட்டா துளைத்துக் கீழே விழுந்த பறவையின் வலியிலும், மாற்றுத்தந்தையின் வன்கொடுமைக்கு ஆளாகித் திக்குத்தெரியாமல் திகைத்த மாணவியின் துயரத்திலும் நனைந்த இதயம் இந்த எழுத்தாளரின் இதயம். ஆசிரியரான இவருடைய தாயார், தான் பழகிவந்த நேர்மையை இவருக்கும் போதித்து, அஞ்சாமையை இவருக்குப் பாலோடு புகட்டியிருக்கிறார்.

அன்பான தந்தை, ஆதரவான உடன் பிறந்தோர். மனம் சலிக்காத கணவர்; பொறுப்பான மக்கள், அரசியலில் ஆழ்ந்த சுற்றம்!

கவிஞர் அமுதா பொற்கொடி, தான் வெவ்வேறு அனுபவங்களால் வடித்துச் செதுக்கப்பட்ட விதத்தை வேர்களை வருடும் விழுதாகத் தொட்டுத் தடவி, நினைவு கூர்ந்து, இப்புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

வட்டாரப் பேச்சுவழக்கும், கிராமிய மணமும், இவர் நினைவில் நின்றுவிட்ட மாசுபடாத இயற்கைச் சூழலும், இவர் எழுத்துக்கு இனிமை சேர்க்கின்றன. எழுத்திலும், அதன் நடையிலும், உற்சாகம் மிளிர்கிறது. 

சமூக உணர்வும், எந்தக் கோட்பாட்டிலும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாத தனித்துவமும், இவருடைய மனமுதிர்ச்சியைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. 

இவர் மூதாதையரின் தேரிமேட்டுப் பண்ணைவீட்டை விவரிக்கும்போது ஒரு நூற்றாண்டின் வரலாற்றையும் வாழ்வியலையும் போகிறபோக்கில் படம் பிடிக்கிறார். 

“கூடத்தைக் கடந்து ஓடினேன். பரணுடன் கூடிய இருண்ட அறை. 

இந்த அறைக்குப் பெயர் ‘தெக்கு வீடு’ பரணுக்கு அடியில் தானியங்களைச் சேமித்து வைத்திருக்கும் பெரிய குலுக்கைகள், அருகில் ஒரு சிறிய நார்க்கட்டில்; அதன் தலைக்கு நேராய் மேலிருந்து ஒரு கம்பி வளையத்துடன் தொங்கும் கயிறு … இது தான் பிரசவ அறையும். பிரசவத்தின் போது தாங்கிப் பிடித்து எழத்தான் அந்தக் கயிறு” இந்த ஐந்து வரிகளில் பல சிறுகதைகள் அடக்கம்.

சிறுமியாய்த் தோழியருடன் மருதாணி இலை பறிக்கச் சென்ற பிரதாபம் சுவாரஸ்யம். 

போகும் வழியின் வர்ணனையில் சங்கத் தமிழ் மண்ணின் ஈரமும் செழுமையும் இழையோடுகின்றன. 

“கோடை மழையால் குளம் நீர் நிரம்பித் ததும்பிக்கொண்டிருந்தது”, என்று தொடங்கி ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முந்தைய புலத்துக்கும் காலத்துக்கும் நம்மை அநாயாசமாக அழைத்துச் செல்கிறார் அமுதா.

வெந்தயக் களியும் கிண்ணிப்பெட்டியும் சித்திரை மாதத்து இடி மின்னலும் மழையில் பெயர்ந்து விழுந்த ஆல விருட்சமும் கூடவே கோவில் திருவிழா நடந்து முடிந்த வடுவுமாய் ஆலடிப்பட்டி கிராம வாழ்க்கை நம் மனக் கண்ணில் விரிகிறது.

விருட்சமாய்ப் பரவிக் குடும்பத்தைக் காத்த குலத்தினரும் ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொள்கிறார்கள்.

அவர்களை நமக்குப் பரிச்சயப்படுத்தித் தம் நினைவுகளோடு நம்மையும் தம் எழுத்தாற்றலால் ஒன்றிப்போகச் செய்கிறார் அமுதா பொற்கொடி. நீரோட்டம்போன்ற தெளிவான நடை!

தம் கணவர் ஹெபடைட்டிஸ் பி நோயால் பாதிக்கப்பட்டபோது எழுத்தாளர் நிறைமாத கர்ப்பிணியாகப் பட்ட கலக்கத்தையும் எதிர்கொண்ட இன்னல்களையும் யதார்த்தமாகச் சொல்லியிருப்பது புத்தகத்தின் உருக்கமான பகுதி.

கந்தர் சஷ்டிக் கவசத்தை ஒரு முறை சொல்லி, ஆறு முறை சொல்லிப் பிறகு முப்பத்தாறு முறை தினம் சொல்லும் பழக்கம் தம்மைப்பற்றிக் கொண்டதையும் அமுதா விவரிக்கிறார்.

நிறைவான வாழ்க்கை என்றாலும் அமுதாவின் ஒரு லட்சியம் மட்டும் நிறைவேறாதது பெரிய குறை தான்.

ஆசிரியர் அமுதா, தாளாளர் அமுதா, எழுத்தாளர் அமுதா, கவிஞர் அமுதா இப்படியெல்லாம் இவர் அழைக்கப்பட்டாலும் இவர் வெறிகொண்டு விழைந்த ஒரு பட்டம் இவருக்குக் கிடைக்கவேயில்லை. அது, ‘துப்பறியும் அம்மு’. இது என்ன புதுக்கதை என்று கேட்கிறீர்களா? படித்துப்பாருங்கள்!

பூட்டை உடைக்கக் கற்றதிலிருந்து பி ஏ தடய அறிவியல் சேர முனைந்தது வரை அந்த அமுதா ‘வேற லெவல்’! கனவாகிப்போன அந்த ஆசை இவரை இன்னும் துரத்துகிறது.

அதனால் கனவில் ஜேம்ஸ்பாண்டாக மாறி மூச்சிறைக்க யாரையோ துரத்திக்கொண்டிருக்கிறார்! விரைவில் பிடித்துவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!

அணில் வளர்த்தது, அஞ்சல் தலை சேகரித்தது, நாய் வளர்த்தது, ஆல்பம் தயாரித்தது, பேனா நண்பர் சங்கத்தில் சேர்ந்து பிரச்னையில் மாட்டிக்கொண்டது,

அண்ணன் பட்டம் விட ‘லொட்டாயைக் கையில் ஏந்தி ஆட்டுக்குட்டி போல் சுற்றிவந்தது’, என்று பல அனுபவங்களில் தோய்ந்த தம் நினைவுகளை இப்புத்தகத்தில் கோவையாகத் தொகுத்திருக்கிறார் அமுதா. “அது அடிமைத்தனம் இல்லை, நம்பிக்கை”, என்று ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பார். அதை இரசித்தேன்.

மறைமூர்த்தி கண்ணனை, மலையப்பனைக் காத்திருந்து தரிசித்த முதல் அனுபவத்தையும் அழகாகச் சொல்லியிருக்கிறார். இவர் செய்தி வாசித்திருக்கிறார் என்னும் தகவல் இப்புத்தகத்தைப் படித்த பின் உங்களுக்கும் தெரியவரும்!

வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்தில் என்ன உணர்ந்தார் என்ற விவரங்களே இவர் யார், இவருடைய தனிமனிதக் கோட்பாடுகள் எவை என்பவற்றை விளக்குகின்றன.

தன்னை நேர்த்தியாக வைத்துக் கொள்ளக் கூட முடியாத சூழலில் பெண்கள் வேலைப்பளுவில் துவண்டு போவது பற்றிய இவருடைய அங்கலாய்ப்பில் அத்தனைப் பெண்களின் அசதியும் தொனிக்கிறது.

தொலைக்காட்சி இல்லாத காலத்தில் வீட்டு மொட்டைமாடிகள் ஒண்டுக் குடித்தனங்களின் குடும்ப சமூக விளையாட்டு அரங்கங்களாகத் திகழ்ந்ததை நினைவு கூர்கிறார். ‘இன்றோ மொட்டைமாடிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.’

பயமறியாத கொத்தனாரையும் பாதுகாப்புக்குப் பழைய மாணவர்களையும் வைத்துக்கொண்டு பள்ளிக்குச் சுற்றுச்சுவர் அமைத்த படலம்; பணம் எதிர்பார்த்து வந்த பேட்டை ‘வெத்துவேட்டை’ பயமுறுத்தி அனுப்பிய ராஜ தந்திரம்; 

தாகத்தில் தவித்தபோது தண்ணீர் தந்த இஸ்லாமியர் வடிவில் வந்தது தான் வணங்கும் விநாயகரே என்ற நம்பிக்கை;

வீட்டைக் களவாட நேரம் பார்த்த பெண்ணையும் நம்பி, தர்ம சிந்தனையோடு புகலிடம் தந்தவரின் வெள்ளை மனம்;

பிள்ளையைப் பறிகொடுத்தும் பூவாகச் சிரிக்கமுடிந்த செல்வியின் பெருந்தன்மை என “முல்லை சம்பங்கி அடுக்குமல்லி கேந்தி மரிக்கொழுந்து மாம்பூ மாதுளம்பூவாக” மணக்கிறது அமுதா பொற்கொடியின் அனுபவக் கோவை.

 ‘வேர்களை வருடும் விழுது’. 

கல்விப்பணியில் தோய்ந்திருக்கும் கவிஞர் அமுதா இன்றைய மாணவர்களைக் குறித்துத் தாம் கொண்டிருக்கும் கவலையைப் புத்தகத்தின் முத்தாய்ப்பாகச் சொல்கிறார்.

ஒவ்வொரு நாளுமே ஓர் அனுபவம் தான். தம் மாணவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக, உந்துசக்தியாக, உதவியாகக் கவிஞர் அமுதா பொற்கொடி விளங்குகிறார் என்பதில் ஐயமில்லை. 

சீரிய உடல்நலமும் நிறைந்த மகிழ்ச்சியும் அவருக்கு எப்பொழுதும் அமையவும் அவருடைய எழுத்துப்பணி மேன்மேலும் சிறக்கவும் என் உளமார்ந்த 

வாழ்த்துகள்.

இளவேனில், 2021                                   ஷோபனா ரவி,                                      பெருங்குடி, சென்னை.

- இப்படி ஒரு இனிய அணிந்துரை நெல்லை ஆலடிப்பட்டி கவிதாயினி அமுதா பொற்கொடி நூலுக்கு வாய்த்திருப்பது பெரும் வரமே !!

தொகுப்பு : ஊடகவியலாளன், பத்திரிகையாளன்

-ஆர்.கே.பூபதி.

Comments