பாளை சித்தா கல்லூரியில் மேலும் 4 மாணவிகளுக்கு கொரோனா !!

-MMH

     தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இதையொட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக மருத்துவம் சார்ந்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் கடந்த 16-ந்தேதி முதல் செயல்படத் தொடங்கியது. இதற்காக மாணவ- மாணவிகளின் விடுதிகளும் திறக்கப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.

பாளை சித்தா கல்லூரியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட மாணவர்கள் மட்டுமே வகுப்புக்கு வர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களும் கல்லூரிகளுக்கு வந்து செல்கிறார்கள். இந்நிலையில் மாநகர பகுதியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கடந்த 22-ந்தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் அவருக்கு தொற்று உறுதியானது. உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மாணவியுடன் தொடர்பில் இருந்த சக மாணவிகள் 100 பேருக்கு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியானது. இதில் 4 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் பாளை அரசு மருத்துவமனை எதிரே உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து பாளை சுகாதார ஆய்வாளர் (பொறுப்பு) சங்கரலிங்கம் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள், கல்லூரி வளாகம் வகுப்பறைகள், விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளித்தனர். தொடர்ந்து அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் திருத்தணி கூறியதாவது:-

அரசு விதிமுறைகளை பின்பற்றி தான் வகுப்புகள் நடத்தப்படுகிறது. தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் ஒரு மாணவிக்கு தொற்று ஏற்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் இன்று மேலும் 4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் முதல் தவணை தடுப்பூசி போட்டு கொண்டவர்கள்.

வருகிற 13-ந்தேதி தேர்வுகள் நடைபெறுவதையொட்டி மாணவிகள் நேரடியாக கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டனர். கல்லூரி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.மேலும் 400 மாணவிகளுக்கு பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். சித்தா கல்லூரி மாணவிகள் 4 பேரை தவிர நெல்லை மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

-நாளைய வரலாறு நெல்லை செய்தியாளர்,

-அன்சாரி.

 

Comments