பொன்னமராவதி அருகே `ஹெலிகாப்டர் சகோதரர்கள்' கைது! ரூ.600 கோடிக்கும் மேலாக மோசடி செய்தவர்கள்!

-MMH

        புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமாராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் வழக்கறிஞர் ஒருவரது பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களை காவல்துறையின் மூன்று தனிப்படை பிரிவுகள் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

கும்பகோணம் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீது நிதி நிறுவனம் நடத்தி ₹.600 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரையடுத்து பதியப்பட்ட வழக்கில், சகோதரர்கள் இருவரும் தலைமறைவாக இருந்துவந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், பொன்மராவதியில்  வழக்கறிஞர் ஒருவரது பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த சகோதரர்களை இன்று மூன்று தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமி நாதன் சகோதரர்கள். விக்டரி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம், கிரிஷ் பால்பண்ணை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர். எப்போதும் ஹெலிகாப்டரிலேயே வலம் வந்ததால் `ஹெலிகாப்டர் பிரதர்ஸ்' என கும்பகோணம் மக்களால் அழைக்கப்பட்டனர். தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக திருப்பித் தரப்படும் என ஆசை வார்த்தைகள் கூறி கும்பகோணத்தை சேர்ந்த பலரிடம் நிதி வசூல் செய்தனர். செல்வந்தர்கள், வர்த்தகர்கள், கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் என பலரும் கோடிகளில் அவர்களிடம் முதலீடு செய்தனர்.

சொந்தமாக ஹெலிகாப்டர் மற்றும் இறங்கு தளம், பா.ஜ.க பிரமுகர்களுடன் நெருங்கிய நட்பு என, தங்களை பிரமாண்டமாக அடையாளப்படுத்திக் கொள்வதில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் கில்லாடிகளாக இருந்துள்ளனர். சில வருடங்களாக அவர்களுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் இரட்டிப்பாகப் பணம் திருப்பி தரப்படும் என அறிவித்து செல்வந்தர்கள், வர்த்தகர்கள், பொதுமக்களிடம் நிதி வசூல் செய்துவந்துள்ளனர்.

இந்நிலையில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த தம்பதியான ஜபருல்லா - பைரோஜ்பானு ஹெலிகாப்டர் சகோதரர்கள் தங்களிடம் ₹.15 கோடி மோசடி செய்து விட்டதாகவும், பணத்தைத் திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும்  காவல்துறையிடம் புகாரளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சகோதரர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இந்நிலையில் அவர்களது பால்பண்ணையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து ஹெலிகாப்டர் சகோதரர்கள் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த 12 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் எம்.ஆர்.கணேஷ் மனைவி அகிலா உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸை தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர். சென்னை, பாண்டிச்சேரி, வடலூர் உள்ளிட்ட ஊர்களில் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்து தேடிச் சென்றனர்.

ஆனால், அந்தத் தேடுதல் வேட்டையில் அவர்கள் சிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி கிராமத்தில், வழக்கறிஞர் ஒருவரது பண்ணை வீட்டில் அவர்கள் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. பின்னர் நேற்று மூன்று தனிப்படை காவல்துறையினர் பண்ணை வீட்டைச் சுற்றி வளைத்து, ஹெலிகாப்டர் சகோதரர்களைக் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 13 பேக்குகள், உயர் ரக கார், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து தஞ்சாவூர் குற்றப்பிரிவு அலுவகத்திற்கு ஹெலிகாப்டர் சகோதரர்களை அழைத்து வந்து பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் விசாரணை தொடர்ந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.

-பாரூக், சிவகங்கை.

Comments