ஓட்டப் போட்டிகளில் முதல் பரிசுகளை வென்றுள்ள 'எருது' உயிரிழந்ததால் கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி..!

  -MMH

   கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ளது செட்டி மாதம்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் விவசாயியான இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல், நந்தி தேவா என்ற எருதை வளர்த்து வந்தார். 

இந்த எருது கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பொங்கல் உள்ளிட்ட திருவிழாக்களில் நடத்தப்படும், எருது ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று பல முதல் பரிசுகளை வென்றுள்ளது. எனவே செட்டி மாதம்பட்டி கிராமத்து மக்கள் அந்த எருதை தங்கள் கிராமத்தின் அடையாளமாகவே எண்ணி வந்தனர்.

இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட எருது நந்திதேவா, நேற்று  இரவு உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த எருது வளர்ப்போர் செட்டி மாதம்பட்டி கிராமத்திற்கு வந்து உயிரிழந்த எருது நந்திதேவாவின் உடலுக்கு மாலை மரியாதை செலுத்தி வருகின்றனர். 

எருது நந்தி தேவா உயிரிழந்த சம்பவம் செட்டி மாதம் பட்டி கிராமம் மட்டுமல்லாமல் எருது வளர்ப்போர் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நாளைய வரலாறு செய்திக்காக,

-P. ரமேஷ், வேலூர்.


Comments