ரேஷன்கடைகளில் பயோமெட்ரிக் குளறுபடி!! - மக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் ஏமாற்றம்!!

  -MMH

வேலூர் மாவட்டத்தில் ரேஷன்கடைகளில் பயோமெட்ரிக் குளறுபடி பொருட்கள் வாங்க முடியாமல் ஏமாற்றம். நீண்ட  வரிசையில் காத்திருந்தும் பயனில்லை.

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாக ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தில் பயோமெட்ரிக் கருவியில் ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் யாரேனும் ஒருவர் கைவிரல் ரேகைகளை பதிவு செய்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது . இந்த திட்டத்தினால் முறைகேடுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தினமும் ரேஷன் கடைக்கு சென்று பொதுமக்கள்,பொருட்கள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

பயோமெட்ரிக் முறையில் முதியவர்கள் கைவிரல் ரேகை பதிவாகாமல்,ரேஷன் கடைக்கும் வீட்டிற்குமாக அலைந்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இப்பிரச்சனை அதிக அளவில் உள்ளதாக பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்கின்றனர். இதில் குறிப்பாக வேலூர்,காட்பாடி, கே வி குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பயோமெட்ரிக் குளறுபடிகள் அதிக அளவில் உள்ளது.  இந்நிலையில் நேற்று வேலூர் சத்துவாச்சாரியில் சி எம் சி காலனி அருகே உள்ள ரேஷன் கடையில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்து சென்றனர். அப்போது ஒரு மூதாட்டி தள்ளாடியபடி, பொருட்கள் வாங்க ரேஷன் கடைக்கு வந்துள்ளார். அவரது கைவிரல் ரேகை பதிவாகவில்லை. இதனால் அவருக்கு பொருட்கள் வழங்கப்படவில்லை. முதியவர் என்பதால் கைவிரல் ரேகை பதிவாகவில்லை என எண்ணிய நிலையில் அடுத்து வந்த ஒரு வாலிபர் கைவிரல் ரேகை பதிவாகவில்லை. இதனால் அந்த ரேஷன் கடைக்கு வந்தவர்கள் பெரும்பாலோனோர் பொருட்கள் வாங்க முடியாமலேயே மாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இப்படி மாவட்டம் முழுவதும் பல ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதிகாரிகள் கள ஆய்வு செய்து  இப்பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் கூறியதாவது: "மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் முதியவர்களின் கைவிரல் ரேகை பதிவாக வில்லை என்றால், அவர்கள் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட முதியவருக்கு பதில், அவர் கூறும் மற்றொருவர் பொருட்கள் பெற்றுக் கொள்ள அனுமதிக்கக் கோரி விண்ணப்பம் அளிக்கலாம். அதன்பேரில் அங்கீகரிக்கப்பட்ட நபர் மூதாட்டிக்கு பதிலாக பொருட்கள் பெறமுடியும். வயதானவர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு பயோமெட்ரிக் பதிவாக விட்டால் அந்தந்த தாலுகாவிற்கு பொறியாளர்கள் உள்ளனர். அவர்கள் அனுப்பி பயோமெட்ரிக் இயந்திரம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பயோமெட்ரிக் பதிவாக விட்டால் செல்போன் எண்கள் வைத்து பொருட்கள் பெற முடியாது." இவ்வாறு அவர் கூறினார். 

-P. ரமேஷ், வேலூர்.

Comments