வால்பாறையில் குவியும் சுற்றுலா பயணிகள்! கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம்! நடவடிக்கை எடுக்குமா சுகாதாரத்துறை?

      -MMH

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பு வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கூட்டம் பெருகியுள்ள நிலையில் மீண்டும் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் நிலவியுள்ளது. வால்பாறை மலைப்பகுதி ஒரு அழகிய தோற்றம் கொண்டது. குளிர்ந்த வெப்பநிலை, சமவெளிகள், குளிர்ந்த காற்று அழகிய மலை தோற்றம், அடர்ந்த காடுகள்,பனிமூட்டம் இன்னும் எண்ணிலடங்கா இயற்கை வளங்களை கொண்டது  வால்பாறை பகுதி. 

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் ஊட்டி கொடைக்கானல் போன்ற மலைப்பகுதி சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், இயற்கை விரும்பிகள் , சுற்றுலாப் பிரியர்கள் வால்பாறையில் வந்து குவியும் வண்ணமாக உள்ளனர். சொல்லப்போனால் அங்கு விடுதிகள் அனைத்தும் இனி வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு தங்க இடமில்லை என்ற அளவுக்கு நிரம்பி வழிகின்றன. இதனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணமுடிகிறது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று முற்றிலும் முடிவடையாத நிலையில் இந்த மக்கள் கூட்டத்தினால் மீண்டும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும் சுகாதாரத்துறை இதை உடனே கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். அதுமட்டுமின்றி அரசுக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனம் பல நாட்களாக கேட்பாரற்று நடுரோட்டில் கிடப்பில் கிடக்கிறது. இதையும் சுகாதாரத்துறை கவனத்தில் எடுத்துக்கொண்டு சீர் செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்ய குமார், முகமது சாதிக் அலி, வால்பாறை.

Comments