ஆழ்குழாய் தண்ணீரை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்!!

   -MMH

    சாத்தான்குளம் யூனியன் பழங்குளம் பஞ்சாயத்து சடையன்கிணறு பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் சடையன்கிணறு- ஆனந்தபுரம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்து, சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு தோட்டத்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சடையன்கிணறு கிராமத்தில் வார்டு உறுப்பினர் முத்துராமலிங்கம் தலைமையில் பொதுமக்கள் நேற்று திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்துவதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-அன்சாரி, நெல்லை.


Comments