தூத்துக்குடி மாவட்டத்தில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு சீதனங்கள் : அமைச்சர் கீதாஜீவன் வழங்கல்.

   -MMH

  குழந்தைகளை நல்ல முறையில் பெறுவதற்கு சத்தான உணவை சாப்பிட்டு தாய்மார்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

தூத்துக்குடியில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை கலைஞர் அரங்கத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம், தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கபடுகிறது. அதன் ஒரு பகுதியாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி, தூத்துக்குடி மாநகரத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவை, சமூக உரிமை மற்றும் மகளிர் பாதுகாப்பு துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கர்ப்பிணி தாய்மார்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்து வளர்ப்பதற்காக இதுபோன்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ளார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் கருவுற்ற தாய்மார்கள் மகிழ்ச்சி அடைந்து ஆரோக்கியமான குழந்தை பெறுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைகிறது. அதன்படி, விளாத்திகுளத்தில் 350 பேர்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. இன்று தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நடைபெற்று வருகிறது. குழந்தைகளுக்கு கருவிலேயே கேட்கும் திறன் இருப்பதால் பெரியோர்களால் வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வளையல்கள் அணிவதால் வளையல் சத்தம் குழந்தைக்கு கேட்பதால் கேட்கும் திறன் அதிகரிக்கும். இது ஒரு சம்பிராதயமான நிகழ்ச்சியாக உள்ளது. ஆறாம் மாதம் குழந்தையின் கரு வெளியுலகை உணர தொடங்குகிறது. குழந்தைகளை நல்ல முறையில் பெறுவதற்கு சத்தான உணவை சாப்பிட வேண்டும். தாய்மார்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும். 90 சதவீத மூளை வளர்ச்சி 6 வயதுக்குள்ளே இருக்கும். எனவே, குழந்தையை 6 வயது வரை நன்றாக சாப்பிட்டு வளர்க்க வேண்டும்;. குழந்தை வளர்ச்சி வீதம் குறைவாக இருந்தால் பேணி காப்பதில் தாய்மார்களுக்கு சிரமம் ஏற்படும். இவற்றை தவிர்க்க நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வேண்டும். தாய்மார்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, முன்னிலை வகித்தார். தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், மாவட்ட திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் தனலெட்சுமி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தூத்துக்குடி நகர்ப்புறம் ரூபி பெர்ணான்டோ, துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.பொற்செல்வன், மாநகர நல அலுவலர் மரு.வித்யா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் புள்ளியியல் ஆய்வாளர் முத்தரசி, முக்கிய பிரமுகர் ஆனந்தசேகரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 -வேல்முருகன், தூத்துக்குடி.

Comments