பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு!!

  -MMH

   வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று பெரும்பாலான பகுதிகளில் சூறைக்காற்று வீசியது.

நெல்லை மாவட்டத்திலுள்ள மூன்றடைப்பு, களக்காடு, சேரன்மாதேவி, அம்பை, சிங்கை, ஏர்வாடி பகுதிகளில் திடீரென்று சூறைக்காற்று சுழன்றடித்தது. இதில் பெரும்பாலான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

களக்காடு பகுதியில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து, விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம், சுரண்டை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் திடீரென்று சூறைக்காற்றுடன் மழை கொட்டியது. இதனால் அந்த பகுதியிலும் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந் தன. பல இடங்களில் வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன.

அடவிநயினார் அணை பகுதியில் அதிகபட்சமாக 15 மில்லி மீட்டர் மழையும், குண்டாறு அணை பகுதியில் 6 மில்லி மீட்டர் மழையும் இன்று காலை வரை பதிவாகியுள்ளது.

கடனாநதி அணை- 4 மில்லி மீட்டர், ஆய்க்குடி- 3 மில்லி மீட்டர், செங்கோட்டை, பாபநாசம் பகுதியில் தலா 2 மில்லி மீட்டர், சேர்வலாறு அணை- 1 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கன மழையும் கொட்டியது.

மழை மற்றும் சூறைக்காற்றினால் குற்றால அருவிகளில் நேற்று தண்ணீர் வேகமாக கொட்டியது. இன்று காலையும் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வெள்ளமாக கொட்டுகிறது.

ஊரடங்கு காரணமாக இதுவரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் இன்று தண்ணீர் நன்றாக கொட்டுகிறது.

மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 2791 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து 510 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. இதனால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

நேற்று 79 அடியில் இருந்த நீர்மட்டம், ஒரே நாளில் 4 அடி உயர்ந்து இன்று காலை 83.15 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 95.80 அடியாக இருந்தது.

ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று காலை 100.20அடியாக உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் சற்று உயர்ந்து இன்று 63 அடியாக உள்ளது. இதுபோல கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், கொடுமுடியாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

நாளைய வரலாறு செய்தியாளர்,

-அன்சாரி, நெல்லை.

Comments