மதுரை டு தூத்துக்குடி பைக்கில் கஞ்சா கடத்தல்! சிக்க வைத்த சிசிடிவி!!

     -MMH

தூத்துக்குடி துறைமுக நகரம், தொழிற்சாலை நகரம் என்பதால் உடல் உழைப்புத் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா சப்ளை செய்யப்படுகிறது. இதில், கடலோரப் பகுதிகள்தான் கஞ்சா தாராளமாகக் கிடைக்கும் இடங்கள். அதிலும், சில இடங்களில் கஞ்சா புகைக்கும் நாற்றம் தான் அதிகம் வீசுமாம். தூத்துக்குடி நகர் மற்றும் சப்- டிவிஷன்களில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள காவல் நிலையங்களில் வாரத்திற்கு 5 முதல் 10 வழக்குகள் வரை பதிவு செய்யப்படுகிறன. கூலித்தொழிலாளர்கள் முதல் மாணவர்கள் வரை வாடிக்கையாளர்கள் பெருகி விட்டதால் கஞ்சாவுடன், காய்ந்த பப்பாளி இலையை தூளாக்கிச் சேர்த்து கலப்படம் செய்தும் விற்கப்படுகிறது. அதனால், ’ஒரிஜினல் டோஸ்’ எனச் சொல்லி கூடுதல் விலைக்கும் விற்கப்படுகிறது.

தூத்துக்குடியில் கஞ்சா புழக்கத்தை தடுக்க எஸ்.பி., ஜெயக்குமாரின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி கணேஷின் மேற்பார்வையில் தென்பாகம் காவல்நிலைய ஆய்வாளர் பிச்சையா தலைமையில் 7 போலீஸார் அடங்கிய தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படைப் பிரிவினர், கடந்த சில நாட்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களில் கஞ்சா பதுக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உள்ளூரில் உள்ள கஞ்சா வியாபாரிகளுக்கு எந்தெந்த வழிகளில் விற்பனைக்காக கஞ்சா கை மாறுகிறது எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாநகர் மட்டுமில்லாமல், மாவட்டம் முழுவதிலும் கஞ்சா புழக்கத்தைக் தடுக்க போலீஸார் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மதுரையில் இருந்து இளைஞர் ஒருவர் பைக்கில் அடிக்கடி தூத்துக்குடி வந்து கஞ்சாவை சப்ளை செய்துவிட்டுச் செல்வதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு எப்படி வந்தாலும் தூத்துக்குடி சுங்கச்சாவடி வழியாகத்தான் வர வேண்டும், அந்த வழியே வந்து புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பாலம் அருகில் வந்துதான் ஊருக்குள் செல்ல முடியும். அதனால், அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் மடக்கிப் பிடித்துவிடலாம் என வியூகம் வகுத்துக் காத்திருந்தனர். இந்த நிலையில், மதுரை ரிஜிஸ்ட்ரேஷன் எண் கொண்ட வெள்ளை மற்றும் நீல நிறம் கலந்த பைக் ஒன்றில் கல்லூரி மாணவர் போல இளைஞர் ஒருவர் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி ஊருக்குள் வந்ததும் ஏற்கெனவே சிசிடிவி கேமராப்பதிவுகளைக் கண்காணித்துக் கொண்டிருந்த தனிப்படைப் போலீஸார் அந்த பைக்கை பின் தொடர்ந்தனர். தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகில் அந்த இளைஞரை மடக்கிய போலீஸார், பைக்கை சோதனை செய்தனர்.

அதில், பைக் சீட்டிற்கு அடியில் உள்ள பொருட்கள் வைக்கும் பெட்டிக்குள் 10.5 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்த இளைஞரைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 10.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அந்த கஞ்சாவின் மதிப்பு 3.5 லட்சம் என்றனர் போலீஸார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், பெயர் மணிமாறன் என்பதும், மதுரை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு யாருக்காக கடத்தி வந்தார்? மதுரையில் அவருக்கு கஞ்சா சப்ளை செய்தது யார்? அவரது சங்கிலித் தொடர்புகள் என்னென்னெ என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு பஸ், ரயில், லாரி மூலம் நடந்து வந்த கஞ்சா கடத்தல் தற்போது பைக் மூலம் நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-தூத்துக்குடி, வேல்முருகன்.

Comments