பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த காட்டு யானை! பயத்தினால் உறைந்து போன பயணிகள்!

 

-MMH

      நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப் பனை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள பலா மரங்களில் தற்போது பலா பழங்கள் காய்த்து மிகுந்த வாசனையோடு காணப்படுகிறது.இந்த சூழ்நிலையில் இந்த பலா பழங்களின் வாசனையால் ஈர்க்கப்படும் காட்டுயானைகள்  சமவெளிப் பகுதிகளில் இருந்து இங்கு வந்து முகாமிட்டுள்ளன.

இவ்வாறு வரும் காட்டு யானைகள் குட்டிகளுடனும்,  தனியாகவும்,கும்பலாகவும் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு செல்லும் சாலையில் அவ்வப்போது உலா வந்த வண்ணம் உள்ளன .எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 8.30 மணிக்கு  கோத்தகிரி மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கோத்தகிரியில் இருந்து ஈரோட்டிற்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது பஸ்ஸில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர் .இந்தப் பேருந்து தட்டப் பள்ளம் என்னும் இடத்தின் அருகே சென்று கொண்டிருந்தது அப்போது சாலையின் நடுவே பஸ்சை வழிமறித்தபடி காட்டு யானை ஒன்று நின்றது.இதனை கவனித்த பேருந்து ஓட்டுனர்  பேருந்தை பின்னோக்கி நகர்த்தினார். 

இதனால் அந்த யானை சாலையின் நடுவே அங்குமிங்குமாக வந்தபடி இருந்தது.திடீரென்று ஆக்ரோஷத்துடன் அந்த காட்டு யானை பேருந்தை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் டிரைவர் என அனைவரும் கதிகலங்கிப் போனார்கள். பேருந்தின் அருகே வந்ததும் யானை துதிக்கையை தூக்கியபடி பிளிரியது மேலும் அந்த ஆண் யானை துதிக்கையால் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது .இதனால் பேருந்து ஓட்டுனர் இருக்கையில் இருந்து எழுந்ததோடு பேருந்தின்  பின்பக்கமாக பயணிகளுடன் சென்று நின்றுகொண்டார். சிறிது நேரம் அந்த யானை பேருந்தை  சுற்றி சுற்றி வந்தது. இதன் காரணமாக பயணிகள் அனைவரும் அச்சத்தில் உறைந்து போய் நின்றனர். சிறிது நேரத்திற்கு பிறகு அந்த காட்டு யானை அந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு புகுந்தது.

இதனையடுத்து டிரைவர் உள்பட பயணிகள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். காட்டுயானை.இந்த சம்பவத்தை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார் தற்போது அது வைரலாகி வருகிறது. எனவே மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லும்படி வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments