வசீம் அக்ரம் பெயரில் விருது! தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் வக்ஃபு தலைவர் ஹைதர் அலி கோரிக்கை!

 

-MMH

        திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் வசிப்பவர் வசீம் அக்ரம். இவர் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளராகவும் இருந்து வந்தார். சமூகநல ஆர்வலராக செயல்பட்டு வந்த இவர் சம்பவத்தன்று மாலை 6.50 மணியளவில் தொழுகையை முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தார்.

வரும் வழியில் காரில் வந்த மர்ம நபர்கள் 6 பேர் அவரை துரத்தி வந்திருக்கிறார்கள். வசீம் அக்ரமை சாலையில் ஓட ஓட விரட்டிய அந்தக் கும்பல், பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததுடன், தலையை துண்டித்து எடுத்துக் கொண்டு வந்த காரிலேயே புறப்பட்டு சென்றார்கள்.

இந்தச் சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது. இந்நிலையில், காரில் தப்பிச் சென்ற மர்ம நபர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் நடத்தி வந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டி சத்திரம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் வசீம் அக்ரம் கொலையில் தொடர்புடைய 6 பேரில் 2 பேர் சிக்கினர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (எ) ரவி (28) மற்றும் டெல்லிகுமார் (24) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், வாணியம்பாடியைச் சேர்ந்த டீல் இம்தியாஸ் என்பவர் சொன்னதின் பேரில் வசீம் அக்ரமை கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் வந்த காரில் ரத்தக்கரை படிந்த கத்தி, அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக, முன்னாள் வக்ஃபு தலைவர் ஹைதர் அலி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'மதரீதியான, சாதிய ரீதியலான இரு தனிநபர்கள் இடையிலோ, குழுக்கள் இடையிலோ மோதல் ஏற்பட்டால் துரிதமாகச் செயல்படும் காவல்துறை, ஒரே சமூகத்தினரிடையே பிரச்னை என்றால் அத்தனை முனைப்பு அந்த விவாகரத்தில் காட்டுவதில்லை.

சட்டம் - ஒழுங்கு பிரச்னை என்று வரும்போது இவ்வாறு இரட்டை நிலைப்பாட்டில் நடந்து கொள்வதென்பது, ஒவ்வொரு சமூகத்திலும் புதிய குற்றவாளிகள் உருவாகவே இது உதவும். மேலும் திட்டமிட்ட குற்றங்களை கண்காணிக்க(OCU) அமைக்கப்பட்ட குழுவின் பணி வரம்புக்குள் வாணியம்பாடி வசீம் அக்ரம் போன்ற இயக்கம் சாராத தன்னார்வலர்களின் பாதுகாப்பு, போதை பொருட்களை கடத்துவோர் பற்றிய ரகசிய தகவல்களை சேகரிக்கும் பொறுப்பை வழங்கி, அந்தக் குழுவிற்குத் தேவையான வசதிகளையும் அதிகரித்து வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் தடை செய்யப்பட்ட பான் பராக், குட்கா போன்ற பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் கடத்தி வரப்படுவதாக சமூக ஆர்வலர்கள் பலர் தெரிவிக்கும் கவலைகளையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராகப் போராடிய வாணியம்பாடி வசீம் அக்ரம் போன்ற நபர்களின் குடும்பத்திற்கு, அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்திற்காக கருணை நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

மேலும் மத நல்லிணக்க விருதை கோட்டை அமீர் பெயரால் வழங்குவது போல், போதை எதிர்ப்புப் பணியில் தியாகம் செய்வோருக்கு "வசீம் அக்ரம்" பெயரால் விருது வழங்கிடவும் வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்'. என்று கூறியுள்ளார்.

-மதுரை வெண்புலி.

Comments