லாரி உரிமையாளர்கள் கோரிக்கை ; அரசு பரிசீலிக்குமா?

 

-MMH

      மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் (தமிழ்நாடு) மற்றும் கோவை லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் லாரி உரிமையாளர்கள் பிரச்சினைகள் குறித்த ஆலோசானை கூட்டம் கோவை பூமார்க்கெட் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.  இதற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். செயலாளர் வாங்கிலி, பொருளாளர் தன்ராஜ் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஏற்றுக் கூலி, இறக்கு கூலி சம்பந்தமாக  ஆலோசனை நடைபெற்றது.

பின்னர் நிருபர்களிடம் தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

சரக்கு லாரிகளில் இந்நாள் வரை லாரி உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டு சுமந்த ஏற்றுக் கூலி, இறக்குகூலி, மாமூல், அட்டிக்கூலி அனைத்தும் சரக்கு உரிமையாளரேயே சார்ந்தது. இது வருகிற 15-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். மேலும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்த போதிலும் மத்திய அரசு டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காமல் மேலும் வரிகளை விதிக்கிறது. இதனால் லாரிகளின் வாடகை தான் உயரும். பொருளாதாரம் பாதிக்கப்படும், விலை வாசி உயரும்.

பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை ஜி.எஸ்.டியில் கொண்டு வர மத்திய அரசு நினைத்தாலே போதும். ஜி.எஸ்.டியில் கொண்டு வரப்பட்டால் 28 சதவீதம் மட்டுமே வரி விதிக்க முடியும். காவல்துறையினர் ஆன்லைன் மூலமாக லாரிகளுக்கு அபராதம் விதிக்கக்கூடாது. லாரிகள் எப்.சி காட்டும் போது ஒளிரும் ஸ்டிக்கர்களை மத்திய அரசு அனுமதி அளித்துள்ள 11 நிறுவனங்களில் இருந்து பெற அனுமதி அளிக்க வேண்டும்.

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களில் மட்டுமே பெற அனுமதி அளித்தனர். தற்போது உள்ள அரசு அதனை மாற்ற வேண்டும். தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழக அரசு இதனை அகற்ற கோரி மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. இது எங்கள் நீண்ட நாள் கோரிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments