தேசிய பணமாக்கல் திட்டம் ஏன்..? முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கேள்வி !!

-MMH

        தேசிய பணமாக்கல் திட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய பணமாக்கல் திட்டம் பற்றி காங்கிரசுக்கு சந்தேகங்களும், எதிர்ப்புகளும் உள்ளன. அடுத்த நான்கு ஆண்டுகளில் குறிப்பிட்ட சில சொத்துக்களில் இருந்து 6 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்போவதாக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு அடையாளம் கண்டுள்ள அந்தச் சொத்துக்கள் தற்போது வருவாய் ஈட்டி வருகின்றன.

நடப்பாண்டில் வெளியிடப்படாத அந்த வருவாய்க்கும், அடுத்த நான்கு ஆண்டுகளில் கிடைக்கும் 6 லட்சம் கோடி ரூபாய்க்கும் இடையிலான வருவாய் வேறுபாட்டை அரசு மதிப்பிட்டதா எனத் தெரிய வேண்டும். குத்தகைக்கு விடாமல் இருந்தால் அந்தச் சொத்துக்களிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் வருவாய், குத்தகைக்கு விடப்பட்டால் ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றின் வேறுபாட்டை விளக்க வேண்டும்.

குத்தகைக்கு விட இருக்கும் சொத்துக்களின் ஒட்டுமொத்த மூலதன முதலீடு என்ன என்பதையும் அரசு தெரிவிக்க வேண்டும். தற்போது விற்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள சொத்துக்கள் வாயிலாக, ஆண்டுக்கு 1.30 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தனியாருக்கு விற்றால் 1.50 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும். எனவே அரசுக்கு கூடுதலாகக் கிடைப்பது 20 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே.

மத்திய நிதியமைச்சர் தன் சொந்த வீட்டை 99 ஆண்டுகளுக்கு எனக்கு குத்தகைக்கு விடட்டும். ஆனால் அந்த வீட்டுக்கு அவர் தான் உரிமையாளர். வீட்டுக்கு நான் உரிமையாளராக இல்லாதபோது வீட்டை நன்கு பராமரிப்பேன் என உறுதியளிக்க முடியுமா? தேசிய பணமாக்கல் திட்டத்தின் நோக்கங்களை மத்திய அரசு பகிரங்கமாக தெரியப்படுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

-ராஜேந்திரன், கோவை.

Comments