ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம் ; நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை! !

 

-MMH

   கோவை உக்கடம்-பொள்ளாச்சி சாலையில் ரூ.430 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே தொடங்கி உக்கடம் பெரியகுளம் வரையும், 2-ம் கட்டமாக உக்கடம் பெரிய குளம் குளக்கரையில் தொடங்கி ஆத்துபாலம் வரையும் நடைபெறுகிறது. இதில் பொள்ளாச்சி மற்றும் குனியமுத்தூர் சாலையில் இருந்து ஒப்பணக்கார வீதி செல்லும் வாகனங்களுக்காக லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே உள்ள சி.எம்.சி. காலனியில் வட்ட வடிவில் இறங்கு தளம் அமைக்கப்படுகிறது.  

இதற்காக இங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுளை காலி செய்யும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு குடியிருந்த வர்களுக்கு தற்காலிகமாக உக்கடம் புல்லுக்காடு பகுதியில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 157 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து  மீதமுள்ள 100 வீடுகளை இடிக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது. 

இதற்காக 2 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. முதலில் வீடுகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்புகள் மின்வாரிய ஊழியர்கள் மூலம் துண்டிக்கப்பட்டன. இதையடுத்து வீடுகள் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கூறியதாவது:-

 உக்கடம் மேம்பால பணிக்காக 5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் தற்போது வரை 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. சி.எம்.சி. காலனியில் 100 வீடுகள் இடிக்கும் பணிகள்  தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணி நாளை (இன்று) தொடர்ந்து நடைபெறும்.

உக்கடம் மேம்பால பணிக்கு இடையூறாக உள்ள உயர்அழுத்த மின்கம்பிகளை நிலத்திற்கு அடியில் கொண்டு செல்லும் பணிகள் ரூ.9 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சலவை தொழிலாளர்கள் குடியிருப்பும் காலி செய்யும் பணி விரையில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments