ரேஷன் அரிசியின் சுவைக்கு பழகிப்போன காட்டுயானைகள் ; ரேஷன் கடைகளை சூறையாடும் கொடூரம்!!

  -MMH

  வால்பாறை வனப் பகுதிகளுக்கு கேரள வனப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வருகின்றனர். குறிப்பாக தமிழக-கேரள எல்லையில் எஸ்டேட் பகுதிகளை சுற்றி குட்டிகளுடன் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன.இவை ரேஷன் கடைகளையும், தேயிலைத் தோட்ட  தொழிலாளர்களின் வீடுகளையும் சேதப்படுத்தி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்நிலையில் முடீஸ் பஜார் பகுதிக்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த 5 யானைகள் கொண்ட கூட்டம் ரேசன் கடையை உடைத்து அங்கிருந்த அரிசியை சாப்பிட்டன மேலும் பொருட்களை சேதப்படுத்தி விட்டு அருகில் உள்ள வீடுகளின் ஜன்னல் மற்றும்  கதவு போன்ற பொருட்களை  உடைத்தும் நாசம் செய்தன  இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் பொதுமக்கள்  உதவியுடன் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.ஏற்கனவே காட்டு யானைகள் கூட்டத்தினால் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இரவில் அச்சத்துடன் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர்.

இதற்கு காரணம் எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் தொழிலாளர்களின் குடியிருப்புக்கு அருகில் உள்ளது .ரேஷன்  கடை அரிசியை சாப்பிட்டு பழகிய  காட்டுயானைகள் ரேஷன் கடையை குறி வைத்து கடையை சேதப்படுத்தி அரிசியை சாப்பிடுகின்றன .இதுபோன்ற சமயங்களில் அருகில் உள்ள தொழிலாளர்களின் வீடுகளையும் சேதப்படுத்துகின்றன அப்போது தொழிலாளர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி உயிர் தப்பு கின்றனர்.

இது குறித்து தொழிலாளர்கள் கூறும்போது,

"தினமும் காட்டு யானைகள் தொல்லையால் பீதியுடன் வாழ வேண்டியுள்ளது இனிமேலும் இது தொடர்ந்தால் காட்டு யானைகளிடம் சிக்கி உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் செல்போன் சேவை கிடைக்காத நிலை இருந்து வருகிறது. இதனால் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை உடனுக்குடன் வனத்துறையினருக்கு  தெரிவிக்க முடியாமல் தவித்து வருகிறோம்.காட்டு யானைகள் நடமாட்டம்  அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட பல்வேறு வனச்சரகங்களில் இருந்து  கூடுதல் ஊழியர்களை வாகன வசதிகலோடு கண்காணிப்பு பணிக்கு ஈடுபடுத்த வேண்டும். உயிர்ச்சேதம்  ஏற்படுவதற்கு முன் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதனால் இரவு நேரத்தில் காட்டு யானைகளால் ஏற்படும் பயமும் அச்சமும் குறையும்." என்று அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments