சிங்கம்புணரி மயானத்தில் 'மது'வால் ஏற்பட்ட வாக்குவாதம், கொலையில் முடிந்தது! வாலிபர் கைது!

 

-MMH

   சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பொது மயானத்தில் நேற்று முன்தினம் தலையில் பலத்தகாயத்துடனும், முகம் எரிக்கப்பட்ட நிலையிலும் ஒருவரது உயிரற்ற உடல் கிடந்தது. உடனடியாக சிங்கம்புணரி காவல்நிலையத்திற்கும், கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்ட காவல் ஆய்வாளர் சீராளன் தலைமையிலான சிங்கம்புணரி காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டார். காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்பு நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் மதுரை, அவனியாபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 62) என்பது தெரியவந்தது. பல பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அவர் ஆலோசகராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, கொலைக்கான காரணம் குறித்து காவல் ஆய்வாளர் சீராளன் தலைமையில் தீவிர விசாரணை நடந்து வந்தது. அப்போது சிங்கம்புணரி உப்புசெட்டியார் தெருவை சேர்ந்த ஓட்டுனர் சத்தியமூர்த்திக்கு (வயது27) இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. சிங்கம்புணரி காவல்துறையினர் அவரைத் தேட ஆரம்பித்த நிலையில், அவர் சிங்கம்புணரி கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசனிடம் சரணடைந்தார். கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக அவரை சிங்கம்புணரி காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். தீவிர விசாரணைக்குப் பின்பு ஓட்டுனர் சத்தியமூர்த்தியை சிங்கம்புணரி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். கொலை நடந்த 24 மணி நேரத்தில் கொலையாளியை சிங்கம்புணரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தக் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, கடந்த 16ஆம் தேதி பொது மயானத்தில் ராமச்சந்திரன் மது போதையில் படுத்துக்கிடந்த நிலையில் அங்கு வந்த சத்தியமூர்த்தி மது அருந்தியிருக்கிறார். அப்போது அங்கு படுத்திருந்த ராமச்சந்திரன், சத்தியமூர்த்தியின் மதுவை எடுத்துக் குடித்திருக்கிறார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி, அருகிலிருந்த உருட்டுக் கட்டையை எடுத்து ராமச்சந்திரனைத் தாக்கியுள்ளார். இதில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர், இலைச் சருகுகளை போட்டு  ராமச்சந்திரன் உடலை எரிக்க சத்தியமூர்த்தி முயற்சித்துவிட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. கொலை நடந்த 24 மணி நேரத்தில் அதில் தொடர்புடைய வாலிபரை கைது செய்த சிங்கம்புணரி இன்ஸ்பெக்டர் சீராளன் மற்றும் காவலர்கள் அனைவரையும் சிங்கம்புணரி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

-ராயல் ஹமீது & அப்துல் சலாம்.

Comments