விபத்து இழப்பீடு வழக்கில், தடம் எண் மாற்றப்பட்ட அரசு பஸ்சை, தேடி பிடித்து ஜப்தி!!

  -MMH

  கோவை: விபத்து இழப்பீடு வழக்கில், தடம் எண் மாற்றப்பட்ட அரசு பஸ்சை, 10 நாட்களாக தேடி பிடித்து ஜப்தி செய்தனர். 

கோவை, தெற்கு உக்கடத்தை சேர்ந்த தேவராஜ் (35), துாய்மை பணியாளரான இவர், 2011 அக்., 9ல், கோவை அரசு மருத்துவமனை, பஸ் ஸ்டாப் அருகில் நடந்து சென்றார். அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். 

இழப்பீடு கோரி, அவரது மகன், மகள் சார்பில், கோவை எம்.சி.ஓ.பி., கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், தேவராஜ் குடும்பத்தினருக்கு, ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், கோவை கோட்ட போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காமல் தாமதம் செய்தது. இதனால், அவர்களது தரப்பு வக்கீல் விமல்நாத், நிறைவேற்று மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி, காந்திபுரம்- சாடிவயல் செல்லும் தடம் எண்:59 'சி' அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டு, கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. 

இதே வழக்கில், தடம் எண்: 7, அரசு பஸ், ஏற்கனவே ஒரு முறை ஜப்தி செய்யப்பட்டது. அதன்பிறகும் இழப்பீடு தராததால், அதே எண் கொண்ட பஸ்சை, ஜப்தி செய்ய இரண்டாவது முறையாக உத்தரவிடப்பட்டது. ஆனால் தடம் எண் 7, பஸ்சை, 59 'சி' என மாற்றி இயக்கப்பட்டதால், அந்த பஸ்சை கண்டறிவதில், கோர்ட் ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. கடந்த 10 நாட்களாக தேடி, பதிவு எண்ணை வைத்து கண்டுபிடித்து நேற்று ஜப்தி செய்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சுரேந்தர்.

Comments