கூண்டுக்குள் சிக்கிய புலி ! தாய்ப்புலி தேடி வரலாம் என வனத்துறையினர் எச்சரிக்கை !

 

-MMH

   வால்பாறை அருகே முடீஸ் பஜாரில் உடல் சோர்வுற்ற புலி ஒன்று நடமாடியது. இதுகுறித்த தகவலின்பேரில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியன், துணை கள இயக்குனர் கணேசன் ஆகியோர் தலைமையில் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவில் முடீஸ் எஸ்டேட் அலுவலக பின்புறம் பதுங்கி இருந்த புலியை வலை மூலம் பிடித்தனர்.

தொடர்ந்து அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் உள்ள வனத்துறையின் மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு மையத்திற்கு புலியை கொண்டு சென்று, கூண்டில் அடைத்து அதன் காயங்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-       பிடிபட்ட ஆண் புலி பிறந்து 8 மாதங்கள் இருக்கலாம். பிற வனவிலங்குகளுடன் சண்டையிட்டதில் உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் புலிக்கு உடல் வலி மருந்து, நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, உடலுக்கு சக்தி தரக்கூடிய ஊட்டச்சத்து மருந்து ஊசி மூலம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

பால், இறைச்சி ஆகிய உணவுகளும் வழங்கப்படுகிறது. ஓரிரு நாட்கள் சிகிச்சை அளித்து, உடல்நிலை முன்னேற்றம் அடைந்த பிறகு அந்த புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதா அல்லது சென்னையில் உள்ள வண்டலூர் வன உயிரின பூங்காவுக்கு கொண்டு செல்வதா என்பது குறித்து வனத்துறையின் முதன்மை தலைமை வனபாதுகாவலர் மற்றும் வனவிலங்கு பாதுகாவலர் ஆகியோரின் உத்தரவின்பேரில் முடிவெடுக்கப்படும்.

வழக்கமாக வனப்பகுதியை விட்டு எளிதில் புலிகள் வெளியே வராது. தற்போது பிறந்து 8 மாதங்களே ஆன ஆண் புலி தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்து உள்ளது. அந்த புலிக்கு, அதன் தாய் வேட்டையாட கற்றுக்கொடுக்க அழைத்து சென்றிருக்கலாம். அப்போது நீண்ட தூரம் நடந்து செல்ல அந்த புலியால் முடியாத நிலை ஏற்பட்டதால், அதனை விட்டுவிட்டு தாய் சென்றிருக்கலாம். இதனால் தாய் புலி நடமாட்டம் தொடர்பாக முடீஸ் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வனத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.இ்வ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதன்படி மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் முடீஸ் பகுதியில் வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இன்னும் ஓரிரு நாட்களுக்கு இரவில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.திவ்ய குமார்.

Comments

Satheesh kumar said…
வில்லோனி எஸ்டேட் வனப்பகுதிகளில் புலிக்குட்டி ஒன்று சுற்றி திரிவதாக குடு வாட்ஸ் அப் குழுக்களில் செய்தி பரவியது