சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல் யார் என்ற அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது!!


   -MMH

   கோவையில் சாலையில் பெண் உடல் இழுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில், உயிரிழந்த பெண் யார் என்ற அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய காரின் உரிமையாளரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை - அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில், சின்னியம்பாளையம் அருகே கடந்த 6-ம் தேதி அதிகாலை பெண் ஒருவரின் உடல் சிதைந்த நிலையில் கிடந்தது. பீளமேடு போலீஸார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கார் ஒன்றில் சிக்கி அப்பெண் உடல் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு, பிறகு சாலையில் விழுந்தது தெரிந்தது. அப்பெண் விபத்தில் சிக்கினாரா? அல்லது கொலை செய்யும் நோக்கில் யாரேனும் காரிலிருந்து தூக்கி வீசினார்களா? என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த பெண் யார், காரின் உரிமையாளர் யார் என்ற விவரங்களை போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, "உயிரிழந்த பெண் சின்னியம்பாளையம் அருகேயுள்ள கரியாம்பாளையத்தை சேர்ந்த லட்சுமி என்பதும், அவர் தனியார் கல்லூரி உணவகத்தில் வேலை செய்து வந்ததும், சம்பவத்தன்று அதிகாலை வேலைக்கு செல்வதற்காக சின்னியம்பாளையம் பேருந்து நிறுத்தம் நோக்கி சாலையை கடந்து செல்ல முயன்றபோது, காரில் சிக்கி உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது.

சூலூர் பட்டணம் அருகே சர்வீஸுக்காக வந்த கார் ஒன்றின் அடிப்பாகத்தில் பெண்ணின் சேலை சிக்கியிருந்தது மெக்கானிக் ஒருவர் மூலமாக தெரியவந்தது. லட்சுமி உடலில் இருந்த கிழிந்த சேலையும், காரின் அடிப்பாகத்தில் இருந்த சேலையும் ஒரேமாதிரி இருந்ததால், விபத்தை ஏற்படுத்தியது அந்த கார்தான் என உறுதி செய்யப்பட்டது.

காரின் உரிமையாளர் காளப்பட்டி இந்திரா நகரை சேர்ந்த ஃபைசல் (36) என கண்டறியப்பட்டது. அவரை பிடித்து விசாரித்த போது, திருச்சியில் உள்ள தனது தாயாரை மனைவி, சகோதரருடன் சென்று பார்த்து விட்டு, 6-ம் தேதி அதிகாலை காரில் திரும்பியபோது விபத்து நேர்ந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, அஜாக்கிரதையால் மரணம் ஏற்படுத்துதல் மற்றும் மோட்டார் வாகன சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு மாற்றி பதிவு செய்யப்பட்டு, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்" என்றனர்.

-சுரேந்தர்.

Comments