பொள்ளாச்சி ஆழியார் அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்..!!

 -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் கவியருவியில் விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பூங்கா மற்றும் கவியருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் வருவது வழக்கம். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு இருந்தபோது பொள்ளாச்சியில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு இருந்தன.

 கடந்த வாரம் தமிழக அரசு ஊரடங்கு தளர்வு அறிவித்த நிலையில், சுற்றுலா தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழியார் கவியருவி மற்றும் ஆழியார் அணை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் மற்றும் கவியருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றனர்.

கவியருவியில் ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் நேற்று அனுமதிக்கப்பட்டபோதிலும்.

நோய் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக ஆழியார் அணை பூங்கா நேற்று மூடப்பட்டு இருந்தது. இதனால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலை ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் அதிகம் செல்வதால் ஆழியார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஆழியார் காவல்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments