டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை!! - பீதியில் மற்ற அதிகாரிகள்!!

  -MMH

    கோவை மாநகராட்சியில், டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையால், மற்ற அதிகாரிகள் பீதியில் உறைந்திருக்கின்றனர்.

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கோவை மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் அனைவரும் வெவ்வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே, கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் உடனடியாக மாற்றப்பட்டனர். கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததும், நகர் நல அலுவலர் மாற்றப்பட்டார்.

இதேபோல், அனைத்து பிரிவு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றப்படுவது உறுதி என்கிற கருத்து உலவியது.ஆனால், சுகாதார ஆய்வாளர்கள் மட்டும், மாநகராட்சி எல்லைக்குள் மண்டலம் விட்டு மண்டலம் மாற்றப்பட்டனர். உதவி கமிஷனர் அந்தஸ்தில் இருப்பவர்கள், கிரேடு-1 ஆபீசர்கள் என்பதால், தமிழக அரசே உத்தரவிட வேண்டும். இருப்பினும், அவர்களுக்கு, வெவ்வேறு மண்டலங்களுக்கு இட மாறுதல் வழங்கப்பட்டது.

அடுத்த கட்டமாக, உதவி/ இளம் பொறியாளர்களை மாற்றுவதற்கும், அ.தி.மு.க., ஆட்சியில் இரவோடு இரவாக நியமித்த இளநிலை உதவியாளர்கள் பட்டியல் கோப்பும், துாசி தட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், துணை கமிஷனராக இருந்த விமல்ராஜ், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது, மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, டெண்டர் முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு அதிகாரிகள், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். மூன்று அதிகாரிகள் வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டிருக்கின்றனர். இத்தகைய அதிரடி நடவடிக்கை, பொறியியல் பிரிவினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனெனில், பொறியியல் பிரிவில் ஒரு வேலை செய்வதாக இருப்பின், 'எம்' புக் (அளவீட்டு புத்தகம்) தயாரிப்பர். அது, குறிப்பிட்ட வேலையின் ஜாதகத்தை சொல்லும்.உதவி பொறியாளர், உதவி நிர்வாக பொறியாளர், நிர்வாக பொறியாளர், நகர பொறியாளர் என, பொறியியல் பிரிவை சேர்ந்த அனைத்து அலுவலர்களின் கையெழுத்தும் அதிலிருக்கும். அதனால், அப்பிரிவை சேர்ந்த அனைத்து அலுவலர்களும், இட மாறுதலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இதேபோல், மண்டல உதவி கமிஷனர்களாக இருந்தவர்களில் சிலர், அ.தி.மு.க., ஆட்சியில், அக்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு இருக்கிறது. அவர்களும், தங்களுக்கு மாறுதல் உத்தரவு வருமோ என்கிற பீதியில் இருக்கின்றனர்.

கோவை மாநகராட்சியில் நடந்த 'டெண்டர்' முறைகேடு தொடர்பாக, அ.தி.மு.க., ஆட்சியில் பணிபுரிந்த முன்னாள் கமிஷனர்களிடம் விசாரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.கோவை மாநகராட்சியில், 346 கோடி ரூபாய்க்கு டெண்டர் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகார் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நகர பொறியாளர் லட்சுமணன், உதவி நிர்வாக பொறியாளர் சரவணகுமார் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மூன்று அதிகாரிகள், மதுரை, வேலுார், ஈரோடு மாநகராட்சிகளுக்கு மாற்றப்பட்டனர்.எந்தவொரு பணியாக இருந்தாலும், டெண்டர் இறுதி செய்ய, மாமன்ற கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் வழங்கப்படும். அ.தி.மு.க., ஆட்சியில் கமிஷனர்களாக இருந்தவர்கள் தலைமையில் 72 கூட்டங்கள் நடத்தப்பட்டு, 2,886 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை, மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படுவது வழக்கம்.

ஒரே நிறுவனத்துக்கு, அதிகமான தொகைக்கு ஏகப்பட்ட பணிகள் ஒதுக்கியது; ஒரே பணியை தனித்தனியாக பிரித்துக் கொடுத்தது; குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே, பல டெண்டர்களில் பங்கேற்றது.சில நிறுவனங்களுக்கு முன்னரே பணி ஒதுக்கி, தீர்மானம் நிறைவேற்றியது உள்ளிட்ட தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.இவற்றால், இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது நிறுத்தப்பட்டது. தி.மு.க., தரப்பில் பலமுறை வலியுறுத்தியும், அப்போதைய மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மாநகராட்சி கமிஷனராக ராஜகோபால் நியமிக்கப்பட்டார்.

அவர் பொறுப்பேற்றதும், மாமன்ற தீர்மானங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டன. அதன்பின்னரே, டெண்டர் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது.வழக்கமாக, உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால், மாநகராட்சி தனி அலுவலர் பொறுப்பு, அந்தந்த மாவட்ட கலெக்டர் வசம் ஒப்படைக்கப்படும். அ.தி.மு.க., ஆட்சியில், அந்தந்த மாநகராட்சி கமிஷனர்களுக்கே பொறுப்பு வழங்கப்பட்டது.

அப்போது கமிஷனர்களாக இருந்தவர்களில், விஜயகார்த்திகேயன் 39 கூட்டங்கள் நடத்தி, 1,404 தீர்மானங்கள்; ஷ்ரவன்குமார் 22 கூட்டங்கள் நடத்தி, 922 தீர்மானங்கள்; குமாரவேல்

பாண்டியன் 11 கூட்டங்கள் நடத்தி, 560 தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கின்றனர்.கமிஷனர்கள் ஒப்புதலின்றி டெண்டர்களை இறுதி செய்து, தீர்மானம் நிறைவேற்ற முடியாது. அதனால், டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, கமிஷனர்களாக இருந்தவர்களையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.தற்போது, தமிழ்நாடு மனித உரிமை ஆணைய செயலராக விஜயகார்த்திகேயன், வேளாண்மை துறை கூடுதல் இயக்குனராக ஷ்ரவன்குமார், வேலுார் கலெக்டராக குமாரவேல் பாண்டியன் பணிபுரிகின்றனர்.

-சுரேந்தர்.

Comments