முகநூல் பழக்கம்! முடிவில்லா சோகம்!! விழித்துக் கொள்வார்களா இளம் தலைமுறையினர்!!
கோவையை சேர்ந்த 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருபவர் நாகராஜ் (22). இவர்கள் 2 பேருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 2 பேரும் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு அடிக்கடி பேசி பழகி வந்தனர். மேலும் அவர்கள் நேரில் சந்தித்தும் பேசி உள்ளனர். இதைத்தொடர்ந்து, அந்த கல்லூரி மாணவியிடம் காதலிப்பதாக நாகராஜ் கூறினார். இதை நம்பிய கல்லூரி மாணவியும் அவரை காதலித்ததாக தெரிகிறது. இதற்கிடையே "நம்முடைய காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள். எனவே நாம் திருமணம் செய்து கொள்ளலாம்" என்று நாகராஜ் கூறியுள்ளார்.
சம்பவத்தன்று நாகராஜ் கூறியபடி அந்த மாணவி வீட்டை விட்டு வெளியேறி கோவையில் தயாராக இருந்தார். அதன்படி நாகராஜ் கோவை வந்து, அந்த கல்லூரி மாணவியை அழைத்துக் கொண்டு திருப்பூர் சென்றார். அங்கு, தான் தங்கி இருந்த வீட்டில் வைத்து மாணவிக்கு நாகராஜ் தாலி கட்டினார். பின்னர் அவர்கள் 2 பேரும் கணவன்,மனைவி போல வாழத் தொடங்கினர். சிறிது நாட்கள் மகிழ்ச்சியாக சென்ற நிலையில், நாகராஜ் அந்த மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு செய்தார். மேலும் அந்த மாணவியை 3 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி நாகராஜிடம் இருந்து தப்பித்து கோவையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர், நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் நாகராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் நாகராஜை வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்து கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா கூறும்போது, "பெண்கள் தங்களது படங்களை சமூக வலைதளங்களில் பகிரக் கூடாது. பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற குற்றங்களை நேராமல் தடுக்க முடியும்" என்றார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-S.ராஜேந்திரன்.
Comments