கோவையில் 10 லட்சம் பேருக்கு உயிர் காக்கும் பயிற்சி - மாவட்ட ஆட்சியர் தகவல்..!

 

        கோவையில் குறைந்தது 10 லட்சம் பேருக்கு அவசர காலத்தில் உயிரைக் காப்பாற்றுவதற்கான பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சமீர தெரிவித்துள்ளார். விபத்து மற்றும் அவசர காலத்தில் சக மக்களின் உயிரைக் காப்பதற்கான பயிற்சியை 'அலர்ட்' எனும தன்னார்வ அமைப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. 

அந்த வகையில் 'அலர்ட்' அமைப்பு  கோவையில் உள்ள பொதுமக்களுக்கு இந்த பயிற்சியை அளிக்க முன்வந்துள்ளது.  இதற்காக பி.எஸ்.ஜி மருத்துவமனையுடன் இணைந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானதுமாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், அத்வைத் லட்சுமி நிறுவன நிர்வாக இயக்குனர் ரவி சாம், பி.எஸ்.ஜி மருத்துவமனை இயக்குனர் புவனேஷ்வரன், 'அலர்ட்' தலைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்  சமீரன் பேசியதாவது: 

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது உயிர்காக்கும் பயிற்சியை தெரிந்தவராக இருக்க வேண்டும் என்பது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவு. அதனை 'அலர்ட்' அமைப்பு செய்து வருகிறது. இதனை கோவையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் கோவையில் மட்டும் 10 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கான பணிகள் அடுத்த சில வாரங்களில் தொடங்கும்.

அரசு அதிகாரிகள், காவலர்களுக்கு இந்த பயிற்சியை  அளிக்கும் வகையில் அவர்களை நாங்கள் ஒருங்கிணைக்க தயாராக இருக்கிறோம். எந்த நேரத்திலும் நமக்கு ஆபத்து வரலாம். உண்ணும் உணவு உண்ணும் போதும் கூட பிரச்சனை அல்லது விபத்து ஏற்படலாம். அப்போது முதலுதவி அளிக்க உயிர் காக்கும் அடிப்படை பயிற்சிகள் தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். 

நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் பேசியதாவது: 

இந்தியாவில் சாலை விபத்துகளால் ஆண்டுக்கு 1.5 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. கோவை மாநகரில் சராசரியாக ஒரு நாளைக்கு உயிரிழப்பு ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் தமிழகத்தில் குறைந்து வருகிறது. காவல்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைகள் இணைந்து விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

விபத்துக்களால் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் கொண்டு சேர்ப்பதில் 108 ஆம்புலன்ஸ் சேவை சிறந்த சேவை செய்கிறது. 'அலர்ட்' மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து மக்களிடையே முதலுதவி ஏற்படுத்த எடுத்திருக்கும் முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது.

கோவையில் ஏற்கனவே போக்குவரத்து காவல்துறை மற்றும் 'உயிர்' அமைப்பு இணைந்து சாலை விபத்துக்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.  இந்த நிகழ்ச்சியில் அலர்ட் நிறுவனர் கலா பாலசுந்தரம் மற்றும் இணை நிறுவனர் ராஜேஷ் திரிவேதி மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments