இனி சர்டிஃபிகேட் இல்லாமல் பெட்ரோல் பங்க் போக முடியாது!! மீறினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!!

 -MMH

காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக அதிரடி நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவிலேயே காற்று அதிகம் மாசடைந்த நகரங்களில் ஒன்றாக டெல்லி உள்ளது. இதற்கு பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன. எனவே வாகனங்களால் காற்று மாசுபடுவதை தடுப்பதற்காக, டெல்லியில் மிக கடுமையான விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

வாகனங்களுக்கு பியூசி சர்டிஃபிகேட் (Pollution Under Control (PUC) Certificate) இருப்பது இதில் ஒன்று. ஆரம்பத்தில் பியூசி சர்டிஃபிகேட் விதிமுறையை போக்குவரத்து துறை தீவிரமாக அமல்படுத்தவில்லை. ஆனால் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து துறை அதிகாரிகள் தற்போது கடுமை காட்ட தொடங்கியுள்ளனர்.

பியூசி சர்டிஃபிகேட் இல்லாத வாகனங்களை கண்டறிவதற்காக டெல்லி அரசு தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. பெட்ரோல் பங்க்குகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பெட்ரோல் பங்க்குகளில் போக்குவரத்து துறை அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். அங்கு எரிபொருள் நிரப்ப வரும் வாகனங்களை அவர்கள் பரிசோதிக்கின்றனர்.

பியூசி சர்டிஃபிகேட் இருந்து விட்டால் பிரச்னையில்லை. ஒருவேளை பியூசி சர்டிஃபிகேட் இல்லாவிட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''டெல்லியில் அனைத்து வாகன உரிமையாளர்களும் மாசு உமிழ்வு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை நாங்கள் சோதனை செய்து வருகிறோம்.

இதன் மூலம் வாகனங்கள் ஆரோக்கியமான நிலையில் இருப்பதை உறுதி செய்கிறோம். டெல்லியில் அனைத்து வாகனங்களுக்கும் பியூசி சர்டிஃபிகேட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பியூசி சர்டிஃபிகேட் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு நாங்கள் அபராதம் விதித்து வருகிறோம். இங்கு நிறைய வாகனங்களுக்கு பியூசி சர்டிஃபிகேட் இல்லை.

முதற்கட்ட நடவடிக்கையின்போது, பியூசி சர்டிஃபிகேட்களை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என வாகன உரிமையாளர்களுக்கு நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் எங்களின் இந்த கோரிக்கைக்கு நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து பலர் பியூசி சர்டிஃபிகேட் இல்லாமலேயே வாகனங்களை இயக்கினர்.

எனவே தற்போது இரண்டாவது கட்ட நடவடிக்கையில் நாங்கள் இறங்கி விட்டோம். பியூசி சர்டிஃபிகேட் இல்லாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே வரும் காலங்களில் அனைத்து வாகன உரிமையாளர்களும் பியூசி சர்டிஃபிகேட் வைத்திருப்பார்கள் என நம்புகிறோம்'' என்றனர்.

10 ஆயிரம் ரூபாய் என்பது கடுமையான அபராதம்தான். ஆனால் இதற்கு பயந்து கொண்டு வாகன உரிமையாளர்கள் விதிமுறைகளை பின்பற்றுவார்கள் என்பது போக்குவரத்து துறை அதிகாரிகளின் எதிர்பார்ப்பு. டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்று விட்ட காரணத்தால்தான், நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமும் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கு டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு டெல்லி அரசு மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகிறது.

இந்தியாவிலேயே மிக சிறந்த எலெக்ட்ரிக் வாகன கொள்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. டெல்லியை இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பது அம்மாநில அரசின் எண்ணம். அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டெல்லி மட்டுமல்லாது, இந்தியாவின் கிட்டத்தட்ட அனைத்து மாநில அரசுகளும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தொடங்கியுள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால், பொதுமக்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதற்கு தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

-Ln இந்திராதேவி முருகேசன், சோலை ஜெய்க்குமார்.

Comments