2022 ஆம் ஆண்டு காங்கிரசில் புதிய தலைவர்!!

   -MMH

2022 செப்டம்பரில் காங்கிரசுக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி தலைமையில் காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், நாட்டின் பொருளாதாரம் மிக மோசமடைந்துள்ளது. 


பல ஆண்டுகளாக சேமித்த சொத்துக்களை மத்திய அரசு விற்பதே இதற்கு எடுத்துக்காட்டு. உட்கட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று இறுதி செய்யப்படுகிறது. தேசிய அளவில் கூட்டறிக்கைகளை வெளியிட்டுள்ளோம். கட்சி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சுதந்திரமான நேர்மையான விவாதம் வேண்டும். கட்சியின் முழு அமைப்பும் மறுமலர்ச்சியை விரும்புகிறது. அதற்கு ஒற்றுமை முதன்மையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று முடிவடைந்த பிறகு அந்த கடசியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் கூறியதாவது-2022 ஆகஸ்ட் 21ம் தேதி முதல் செப்டம்பர் 20ம் தேதி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும். கட்சியின மேல் மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை பெரிய பயிற்சி திட்டம நடைபெறுகிறது.


கட்சியின் அனைத்து நிலையிலும் உள்ள தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு கட்சியின் சித்தாந்தங்கள், கொள்கைகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களின் எதிர்பார்ப்பு, அடிமட்ட தகவல்கள், தேர்தல் நிர்வாகம், தற்போதைய அரசின் தோல்வி மற்றும் பிரச்சாரத்துக்கு பதிலடி கொடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் நவம்பர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை தொடரும். ஒன்றிய கமிட்டிகளுக்கான தேர்தல் 2022 ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், I. அனஸ்.

Comments