அரசு பேருந்து மோதி விபத்து 2 பேர் பலியான பரிதாபம் ; காவல்துறையினர் விசாரணை!

   -MMH

   திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் புதுப்பட்டியை சேர்ந்தவர் சின்னக்கருப்பன் (வயது 25). இவரது நண்பர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அச்சம்குளம் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (30). 

இவர்கள் 2 பேரும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடக்கிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள பொக்லைன் நிறுவனத்தில் ஆபரேட்டர்களாக வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று திருப்பதியின் தயார் ரங்கம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வந்தது. 

இதையடுத்து திருப்பதி தனது நண்பர் சின்னக்கருப்பனுடன் பொள்ளாச்சியில் இருந்து ராமநாதபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை சின்னக்கருப்பன் ஓட்டினார். 

பொள்ளாச்சி-உடுமலை சாலையில் கோலார்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது,  பழனியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட சின்னக்கருப்பன், திருப்பதி ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவர் கணியூரை சேர்ந்த மதன்குமாரிடம் (33) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments