நெற்குப்பை அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் பலி! 2 பேர் காயம்!

 

-MMH

        நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியிலிருந்து தேங்காய் பருப்பு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று சிங்கம்புணரியை நோக்கி வந்துள்ளது. ஓட்டுனருடன் அந்த வாகனத்தில் மொத்தம் ஐந்து பேர் பயணித்து வந்துள்ளனர்.

நள்ளிரவு 1.30 மணியளவில் அந்த சரக்கு வாகனம் தெக்கூரை அடுத்த அய்யனார் கோவில் அருகே வந்தபோது எதிரே ஒரு லாரி சாலையின் நடுப்பகுதியிலே வந்துள்ளது. எனவே, விபத்தைத் தவிர்ப்பதற்காக சரக்கு வாகனத்தின் ஓட்டுனர் முயற்சித்த போது, கண்ணிமைக்கும் நேரத்தில் சரக்கு வாகனம் சாலையை விட்டு கீழே இறங்கி கவிழ்ந்தது.

விபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டதால் அந்த நள்ளிரவு நேரத்திலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், தகவலறிந்து விரைந்து வந்த நெற்குப்பை காவல்துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சரக்கு வாகனத்தின் மேல் பகுதியிலிருந்த மூன்று பேரில் சிங்கம்புணரி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் முருகன் (வயது 50) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த சிங்கம்புணரியை சேர்ந்த அழகுராஜா, செம்மனிபட்டியை சேர்ந்த ரவி ஆகியோரை நெற்குப்பை காவல்துறையினர் மீட்டு, சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டுனரும் அவருடனிருந்தவரும் லேசான சிராய்ப்பு காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து நெற்குப்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆய்வாளர் செல்வகுமாரி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

-அப்துல்சலாம், பாரூக்.

Comments