உணர்வுகள் பின்னிய அல்லி பாத்திமா படைப்புகள்!! ஒரு கோப்பை தேநீர்!! கொஞ்சம் கவிதை!! தொடர் - 5

     -MMH

மலையாள, தமிழ் எழுத்துலகில் ஒரு நிலவாக, தமது மெல்லிய வெளிச்சக் கீற்றுகளை பரப்ப விட்டுள்ளார், கேரளத்து பெண் கவிஞர், எழுத்தாளர் அல்லி பாத்திமா! மலைவாழ் மக்கள் வாழ்க்கையை மிக நுட்பமாக உற்று நோக்கியது தான் பாண்டிச்சி என்னும் நாவலாக, பிரம்மிக்க வைக்கும் வனப்பூவாக மலர்ந்திருக்கிறது.


அடுத்த நாவல் செல்லக்கருப்பி. இன்னொரு கவிதை நூல் விடியலுக்கு நகரும் விண்மீன்கள். இதையெல்லாம் உணர்வுகளை பின்னும் எழுத்துக்களில் வடித்து படைத்தவர் தான் அல்லி பாத்திமா. கேரள மாநிலம் வண்டிப்பெரியார் பகுதியை சேர்ந்த பெண் கவிஞர், எழுத்தாளர் அல்லி பாத்திமா. இரண்டு நாவல்கள், ஒரே ஒரு கவிதை நூல். இவர் இப்போது வரை எழுதியது அவ்வளவுதான்.


மலையாள, தமிழ் இலக்கிய உலகத்தையே தமது பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார், அல்லி பாத்திமா. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் குமிளி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றுகிறார். இதுதவிர கேரள மாநில கல்வித்துறை பாடத்திட்ட குழுவில் இடம்பெற்றவர்.
அல்லி பாத்திமாவின் தந்தை கமால், தாய் சபுரா. எழுத்தாளர் அல்லி பாத்திமாவுக்கு ஆபிலா, அன்சிலா என இரண்டு மகள்களும், ஆபித் என்னும் மகனும் உள்ளனர்.


எழுத்தாளர், கவிஞர் அல்லி பாத்திமாவிடம் சில கேள்விகள்: 

கே: இதுவரை எழுதிய நூல்கள் எத்துனை?
ப: மூன்று. 
பாண்டிச்சி, செல்லக்கருப்பி நாவல்கள்.
விடியலுக்கு நகரும் விண்மீன்கள் - கவிதை நூல்.

விடியலுக்கு நகரும் விண்மீன்கள் பற்றி...?
விடியலுக்கு நகரும் விண் மீன்கள் புத்தகம் 105 பக்கங்கள் கொண்டது.
இந்த நூலுக்கு கவி வேந்தர் மு.மேத்தா, அய்யா சுப வீரபாண்டியன், திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க தலைவர் முனைவர் நயினார் ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர். 2021 ஜனவரி மாதத்தில், சென்னை புத்தக கண்காட்சியில் கவிஞர்கள் பழனிபாரதி, வெண்ணிலா, அய்யா சுபவீரபாண்டியன், இயக்குநர் மீரா கதிரவன் ஆகிய பிரபலங்கள் வெளியிட்டனர். தமிழ் அலை பதிப்பகம் பிரசுரித்துள்ளது.


கே: உங்கள் கவிதைகள் எதைப் பற்றி  பேசுகிறது?
காதல், இயற்கை, அனுபவங்கள்.
பாண்டிச்சி கதை கரு என்ன?
ப: மலைவாழ் மக்களின் வாழ்வும் அரசியலும் காதலும் தான் பாண்டிச்சி நாவல். என் முகநூல் பக்கத்தில் நிறைய விமர்சனங்கள் வந்துள்ளன. வாசித்தால் உங்களுக்கு புரியும். தமிழ் அலை பதிப்பகம் வெளியிட்டது.


கே: பாண்டிச்சி நாவலுக்கு எத்தகைய வரவேற்பு கிடைத்தது? 
ப: பாண்டிச்சி நாவல் அதிக வரவேற்பை தமிழக இலக்கிய அமைப்புகள் இடையே பெற்றது, மறக்க முடியாதது. 2018 ஆம் ஆண்டு தமிழகத்தின் தஞ்சை அருகே கும்பகோணம் தாழ்வாரம் இலக்கிய அமைப்பு சிறந்த நாவலுக்கான விருதை பாண்டிச்சிக்கு வழங்கி கவுரவித்தது. 2019 ஆம் ஆண்டு, தமிழக அரசின் நூலகத்துறை சார்பில் பாண்டிச்சி நாவலுக்காக சிறந்த எழுத்தாளர் விருது எனக்கு வழங்கியது. இந்த விருதை சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெயராணி வழங்கியது, மறக்க முடியாத நிகழ்வு. 2021 ஆம் ஆண்டு திருப்பூர் தமிழ்ச்சங்கம், இலக்கிய விருது அளித்தது.


கே: செல்லக்கருப்பி நாவல் கதை கரு என்ன?

ப: 220 பக்கங்கள் கொண்டது. நூலின் கதைக்கரு வித்தியாசமானது. அது வெளியில் தற்போது தெரியவேண்டாம். மன்னிக்கவும். அதுவும் ஒரு பெண்ணின் வாழ்வை மையப்படுத்திய நாவல் தான். இந்த நாவல் ஸீரோ டிகிரி பப்ளிகேசன்ஸ் நெடும் விருது பட்டியலில் இடம்பெற்றதில் எனக்கு பெரிதும் மகிழ்ச்சி.


கே: உங்களுக்கு பிடித்த இலக்கிய பிரபலங்கள்?

ப: நாவலாசிரியர் கல்கி. கவிஞர்கள் பாரதி, பாவேந்தர் பாரதிதாசன். பிரபல மலையாள எழுத்தாளர், நாவலாசிரியர் வைக்கம் முகமது பஷீர். தற்கால தமிழ் கவிஞர்கள் மு.மேத்தா, பழனிபாரதி, அறிவுமதி. 


இனி, அல்லி பாத்திமாவின் பாண்டிச்சி நாவல் குறித்து கவிஞர் கோ. பாரதிமோகன் விமர்சனம்.
இதயத்தில் இதயம் மணக்கும் வனப்பேச்சி!
நூல் அறிமுகம்: கவிஞர் கோ.பாரதிமோகன்.

• தமது முல்லை நிலத்திற்கு வந்து தம் குடி இருத்தல் பற்றி விசாரிக்கும் ஒரு பத்திரிகைக் குழுவிடம் விபரம் கதைக்கும் மொழிவழி விரிகிறது, 'பாண்டிச்சி' நாவலின் கதை. பொன்வளக்காட்டின் குடித் தலைவனான மூப்பனின் மகள்தான் கதைத் தலைவி பாண்டிச்சி. மூப்பனுக்குப் பிறகான தேவிநாச்சியான பாண்டிச்சியின் சகாக்கள் வழியேயும் அவ்வப்போது பாண்டிச்சியின் வாய் மலர்தலிலும் அவர்களின் வன வாழ்வு முறைமை படர்ந்து செல்வதை சித்தரித்துச் செல்கிறது நாவல்.


• வனவாழ்வின் பண்பாடு, நம்பிக்கைகள், வழிபாடு, சடங்குகள், இயற்கை உணவுமுறை, தனித்துவமிக்க தெளிந்த சீரிய இறையாண்மை மிக்க அரசியல் 
என தன்னை நகரத்தை விடுத்துத் துண்டித்துக் கொண்டு ஆதிக்குத் திரும்புகிற வாழ்வை மேற்கொள்கிற காட்டுக்குள், காதல் புகுந்து களமாடும் ஓர் அகவரிக் காவியமாகவும் ஒளிர்கிறது கதைக்களம். தம் மூதாதையர் காலத்தில் மதுரைப் பெருநகரை விடுத்து பாலாயணம் புறப்பட்ட ஒரு மனிதக் குழுமம், கேரள வனச்சரகத்தில் குடியேறி நிலைக்கிறது. அந்த ஆதிக்குடியொன்றின் பெண் வாரிசுதான் கதைத் தலைவி.


• பேரறிவும் பெருங்கோபமும் கொண்ட அவள், அன்பெனும் பெரும்பண்பில் உயர்ந்தவள். காட்டு அரசியலை கைக் கொள்ளும் வனதேவதையான அவள் கல்வியும் கற்றவள், கணினியும் கற்றவள்! தன்னைப் போலவே தம் மக்களின் வாழ்வும் பயனுற  உயரவேண்டுமென உழைக்கிற அவள், தன்னை தன் மக்களுக்கானவள் என உறுதியுறுகிறாள். அதற்காகவே தன் இதயக்கனிவை இறுக்கிக் கல்லாக்கிக் கொண்ட காவல் தெய்வம் அவள்.


• காற்றுப்புகா இடத்திலும் கண்ணிமைப் பொழுதில் புகும் காதல், காற்றடர்ந்த கானகத்தை விட்டுவைக்குமா? கட்டு சட்டான கானகத்துள் காதல் நுழைந்து இதய வேட்டை நிகழ்தும் கவித்துவ நடை மிளிரும்  நாவலே பாண்டிச்சி. மிக எளிய மொழியில் சிக்கல் இல்லாத எதார்த்தச் சொற்களில் கதை சொல்லி வாசிப்பவரை கதைக்களமான பொன்வளக்காட்டுக்குள் அழைத்துச் செல்லும் நூலாசிரியர் அல்லி பாத்திமா, வாசகரையும் வனவாசியாக்கி விடுவதே அவரின் கைவண்ண எழுத்தின் சிறப்பு.


• சாதாரணமாக வீட்டு வாசலைக் கடந்து காலார நடக்கத் தொடங்குகிற சிறுநடை பெருநடையாக மாறி, சுவாரசியமான சாலைத் திருப்பங்கள் பல கடந்து, நீண்ட நெடிய பயணமாகத் தொடர்ந்து ஓர் அழகிய அடர்வனத்துள் ஏகி, குளிர் வனப்பேச்சிதனை நம்மை செவிமடுக்கச் செய்கிறாள், இந்தப் 'பாண்டிச்சி'.

• ஆதிக்குடிகளின் பூர்வீகமறிந்து எழுத வனத்திற்குள் பயணிக்கும் பத்திரிகையாளர்களான அறுவரோடு வாசிப்பவர் ஒருவர் சேர்ந்து எழுவராவோம் என்பது நாவலை வாசித்து முடிக்கும் இறுதியில் ஏற்படுகிற இடறாத உறுதி. எழுதப் போனவர்களின் இதயங்கள் அன்பால் உழப்பட்டு அவர்கள் வனத்தை விட்டு வெளியேறிவிடுகிறார்கள்... ஆனால், அந்த வனத்துள் பேரன்பில் உயர்ந்த கனிமரம் ஒன்று விளைந்து தம்மைப் பறித்துக்கொள்ள 
இதயத்தை யாசித்து நிமிர்கிறது, 'பாண்டிச்சி'யாக!


'பாண்டிச்சி' (நாவல்)
ஆசிரியர்        : அல்லி பாத்திமா
தொடர்புக்கு : allifathimmak@gmail.com
பக்கம்              : 176
விலை              : ரூ. 150
வெளியீடு       : தமிழ் அலை
80/24பி. பார்த்தசாரதி தெரு, தேனாம்பேட்டை, சென்னை - 600 086
தொலைபேசி: 044 2434 0200

என, பாரதிமோகன் பாண்டிச்சியை சிலாகித்து பேசி நமக்கு பரிந்துரைக்கிறார்.


மலையாளம், தமிழ் எழுத்துலகில் கவிதை, நாவல் படைப்பில் மிகப்பெரிய பெண் ஆளுமையாக பேசப்படும் அனைத்து தகுதிகளும், நுட்பமான ஆய்வு பார்வையும் கவிஞர் அல்லி பாத்திமாவுக்கு உண்டு. இதனை வெகு சீக்கிரமே காலம் நிர்ணயிக்கும்!

"சிறகு முளைக்காத தேவதையாக தன்னை கற்பனை செய்து கொள்ளும் கவிஞர் அல்லி பாத்திமா...
மனச்சிறகுகளால் பறக்கிறேன் 
என் பச்சை வானத்திலும்... வனத்திலும்..."
என, சுதந்திரமாக பாடுகிறார்.


வாழ்த்துக்கள் தோழி அல்லி பாத்திமா!!
ஒரு கோப்பை தேநீருடனும் கொஞ்சம் மயக்கக் கவிதைகளுடனும் மீண்டும் சந்திப்போம்!!

- பத்திரிகையாளன், ஊடகவியலாளன்,

ஆர்.கே.பூபதி.

Comments