கொரோனா - திரும்பவும் முதல்ல இருந்தா? இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய AY 4.2!

 

-MMH

       இங்கிலாந்து உட்பட உலகின் பல நாடுகளிலும் உருமாற்றமடைந்த டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. டெல்டா ப்ளஸ் AY 4.2 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ், தடுப்பூசி ஏற்படுத்தியுள்ள நோய் எதிர்ப்பு சக்திக்குக் கட்டுப்படுமா என்பதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்தியாவில் மகாராஷ்டிராவிலும் மத்தியப்பிரதேசத்திலும் இந்த டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இது கொரோனா மூன்றாவது அலைக்கு வழிவகுக்குமா என்பது குறித்து தொற்றுநோய் மருத்துவர் சுரேஷ் குமார் என்பவர் கூறும்போது,

"இரண்டாவது அலைக்குப் பிறகு, கொரோனா வைரஸானது உருமாறாத வரைக்கும் பிரச்னையில்லை என்றே நினைத்திருந்தோம். ஆனால், இங்கிலாந்தில் AY 4.2 என்று டெல்டா ப்ளஸ் வைரஸ் உருமாறியிருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவைப் போலவே, லண்டனிலும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பல கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. விளைவு, இந்த இரண்டு நாடுகள் உட்பட கிட்டத்தட்ட 45 நாடுகளில் உருமாறிய டெல்டா வைரஸ் (AY 4.2) பரவ ஆரம்பித்திருக்கிறது. இது வேகமாகப் பரவும் என்கிறார்கள். 

இப்போது நம்மிடமிருக்கிற முக்கியமான கேள்வி, ஏற்கெனவே வந்துபோன கொரோனா உருமாற்றங்களால் நமக்கு ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி, தற்போது பரவி வருகிற AY4.2-க்கு எதிராகச் செயல்படுமா என்பதுதான். இன்னொரு முக்கியமான தகவல், இதுவரை நாம் அனைவரும் செலுத்திக்கொண்ட தடுப்பூசிகள், AY4.2 வகை வைரஸிடமிருந்து பாதுகாக்கும் வாய்ப்பும் மிகக்குறைவே.

இரண்டாவது அலையில் உருமாறிய டெல்டா வேரியன்ட்டால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி, இப்போது பரவி வருகிற AY4.2க்கு எதிராகச் செயல்படுமா என்பதும் தெரியவில்லை. இந்த நிலையில்தான் தற்போது இது இந்தியாவிலும் பரவி வருகிறது.

ஒருவேளை தடுப்பூசியும், ஏற்கெனவே உருவாகியிருக்கிற நோய் எதிர்ப்பு சக்தியும், இந்தப் புதிய வகைக்கு எதிராகச் செயல்படவில்லை என்றால், ஜனவரி அல்லது பிப்ரவரியில் AY4.2 இந்தியா முழுக்கப் பரவலாம். அப்படிப் பரவினால், கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் சந்தித்தது போன்ற கொரோனா பரவலை இந்தியா 2022லும் சந்திக்க நேரிடலாம்" என்றார்.

இந்நிலையில், இந்தப் புது வேரியன்ட் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருவதால் அதன் தன்மை குறித்து ஐசிஎம்ஆர், என்சிடிசி ஆய்வு செய்துவருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்துள்ளார்.

-பாரூக், சிவகங்கை.

Comments