சிவகங்கை பெண் திருப்பூரில் கொலை! திருமணமான ஒரே ஆண்டில் கணவன் செய்த கொடூரம்!

-MMH

       திருப்பூரில் காதல் திருமணம் செய்த ஒரே ஆண்டில் இளம் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையை சேர்ந்தவர் கண்ணையன், மணிமுத்து தம்பதியினர். இவர்களுக்கு வைஷ்ணவி (19) உள்ளிட்ட 4 மகள்கள் உள்ளனர். கண்ணையன் நாட்டரசன்கோட்டையில் வசித்து வருகிறார். மணிமுத்து தனது 4 மகள்களுடன் திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வைஷ்ணவி அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அதே நிறுவனத்தில் பணியாற்றிய தேனி மாவட்டம், போடியை சேர்ந்த அருண்குமார் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. வைஷ்ணவி வீட்டார் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலும் இரண்டு பேரும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். 

திருமணத்திற்குப் பின், போயம்பாளையம் பகுதியில் உள்ள அருண் வீட்டில் இருவரும் தங்கி குடும்பம் நடத்தினர். ஆனால், திருமணத்திற்கு பின்புதான் அருண்குமார் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் இருப்பது வைஷ்ணவிக்கு தெரியவந்தது.

அதன்பின்னர், காதல் தம்பதியினருக்கிடையே அடிக்கடி பிரச்னை எழுந்துள்ளது. பிரச்னை வரும் போது அருண்குமார், தனது மனைவி வைஷ்ணவியை அவரது தாய் வீட்டில் விட்டு விட்டு சொந்த ஊரான போடிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதை தொடர்ந்து அருண்குமார் தனது சொந்த ஊரான போடி சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த வாரம் அருண்குமார் மீண்டும் போயம்பாளையம் வந்துள்ளார். அப்போது மாமியார் மணிமுத்துவிடம் தனது மனைவி வைஷ்ணவியை அழைத்துச் சென்று தனியாக வீடு வாடகைக்கு எடுத்து, தங்குவதாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பாண்டியன்நகர் பகுதியில் உள்ள பண்ணாரியம்மன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தனர். அப்போது வைஷ்ணவி கழுத்தில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து திருமுருகன்பூண்டி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறையினர், வைஷ்ணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து தலைமறைவான அருண்குமாரை தேடி வருகின்றனர். மேலும் இது குறித்து ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

-ராயல் ஹமீது.

Comments