கிணத்துக்கடவு ரயில் நிலையம் திடீர் மூடல்! பொதுமக்கள் அதிர்ச்சி! !

 

  -MMH

   பொள்ளாச்சி-போத்தனூர் இடையே இருந்த மீட்டர் கேஜ் ரெயில்பாதையை கடந்த 2009-ம் ஆண்டு இறுதியில் அகல ரெயில்பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. இந்த பணி முடிந்ததும் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அகல ரெயில் பாதையில் ரெயில் இயக்கப்பட்டது. 

இந்த வழித்தடத்தில் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கும், மதுரையில் இருந்து கோவைக்கும் தினமும் 2 முறை ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

இந்த நிலையில் இந்த ரெயில்பாதையில் மின்மயமாக்கல் பணி தொடங்கியது. இதன் காரணமாக இந்த வழியாக சென்ற ரெயில் கள் நிறுத்தப்பட்டன. தற்போது மின்மயமாக்கல் பணி முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த மாதத்தில் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. 

இதையடுத்து தற்போது பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத் தில் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்க ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கினார். எனவே இந்த வழித்தடத்தில் விரைவில் பயணிகள் ரெயில்கள் இயக்கப்படும் என்று பொதுமக்கள் காத்திருந்தனர். 

இந்த நிலையில் திடீரென்று கிணத்துக்கடவில் உள்ள ரெயில் நிலையம் மூடப்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் 4 பேர் பொள்ளாச்சி ரெயில் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளனர். எனவே அவர்கள் ரெயில் நிலையத்தை பூட்டிவிட்டு சென்றனர். இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

"மின்மயமாக்கல் செய்யப்பட்ட பின்னர் பயணிகள் ரெயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பயணிகள் ரெயில்களை இயக்குவதற்கு பதிலாக கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தை பூட்டி இருப்பது வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது பயணிகள் ரெயில் இயக்கப்படாது என்பதைதான் காட்டுகிறது. 

மேலும் இந்த வழித்தடத்தில் மொத்தம் 40 கி.மீ. தூரம் உள்ளது. அதில் 19 கி.மீ. தூரம் சேலம் ரெயில்வே கோட்டத்துக்கும், 21 கி.மீ. தூரம் பாலக்காடு கோட்டத்துக்கும் கீழ் வருகிறது. இரு கோட்ட அதிகாரிகளும் இணைந்து முடிவு எடுக்காததே இந்த பாதையில் பயணிகள் ரெயில்கள் இயக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் ஆகும். 

எனவே ரெயில்வே உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, பொள்ளாச்சி பகுதியை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும். அத்துடன் இந்த வழியாக உடனடியாக பயணிகள் ரெயில்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

கிணத்துக்கடவு ரெயில் நிலையம் மூடப்பட்டது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, தற்போது இந்த வழியாக சரக்கு ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது. இதனால் ரெயில் நிலையத்தில் ஊழியர்கள் தேவையில்லை. எனவேதான் அவர்கள் பொள்ளாச்சி ரெயில்நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளனர். 

இந்த வழியாக பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டதும், அவர்கள் உடனடியாக நியமிக்கப்படுவதுடன், ரெயில் நிலையமும் திறக்கப்படும் என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments