தொடர் மழை காரணமாக பூக்களின் விலையோ கிடு கிடு! தக்காளி விலையோ சடு குடு!! மக்களின் நிலையோ அய்யோ பாவம்!!!

 

 -MMH

    கோவை பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், சத்தியமங்கலம், திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து விற்பனைக்கு பூக்கள் கொண்டு வரப்படுகின்றன.

இங்கு சிறிய வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர். இதனால் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் நேற்று பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்தது.

கடந்த வாரம் கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை நேற்று ரூ.700-க்கு விற்கப்பட்டது. இதேபோல் ரூ.400-க்கு விற்கப்பட்ட ஜாதி மற்றும் முல்லை பூ ரூ.600-க்கும், ரூ.100-க்கு விற்கப்பட்ட செவ்வந்தி ரூ.200-க்கும், ரூ.200-க்கு விற்கப்பட்ட அரளி ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டன. கோழிக்கொண்டை ரூ.100-க்கும், சம்பங்கி ரூ.250-க்கும், 15 பூக்கள் கொண்ட ரோஜா கட்டு ரூ.100-க்கும், தாமரை ரூ.15-க்கும், விலை போனது.

இதுகுறித்து பூ மார்க்கெட் வியாபாரி ஆசாத் கூறுகையில், தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாகுபடி செய்யப்படும் இடத்திலேயே பூக்கள் அழுகி விடுகின்றன. இதனால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. ஆயுதபூஜை வருவதால் அடுத்த 2 நாட்களில் இன்னும் பூக்கள் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, என்றார்.

மழை காரணமாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளும் அதிக அளவில் அழுகுவதால் அதன் விலையும் அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த வாரம் கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது 45-க்கும், ரூ.20-க்கு விற்கப்பட்ட வெங்காயம் ரூ.30-க்கும், 45-க்கு விற்ற பீன்ஸ் ரூ.55-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

மற்ற காய்கறி விலை விபரம் கிலோவில் வருமாறு:-

கேரட் ரூ.55, அவரை ரூ.45, புடலங்காய் ரூ.20, பீர்க்கன் ரூ.30, சுரக்காய் ரூ.24, பாகற்காய் ரூ.26, பெரிய வெங்காயம் ரூ.42, கோவக்காய் ரூ.26, பீட்ரூட் (ஊட்டி) ரூ.48, உருளைக்கிழங்கு (ஊட்டி) ரூ.42-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவைமாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments