பழுதடைந்துள்ள தொங்குபாலம் பயன்பாட்டிற்கு வருமா ; சுற்றுலா பயணிகளின் கோரிக்கை நிறைவேறுமா?

 

-MMH

    கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் வனப்பகுதிக்குள் கோவை குற்றாலம் அருவி உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். அருவிக்கு செல்லும் வழியில் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும்.  எனவே சாடிவயல் சோதனைச்சாவடியில் இருந்து அருவி உள்ள இடத்துக்கு வனத்துறை வாகனத்தில் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுகிறார்கள். அங்கிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து அருவிக்கு செல்ல வேண்டும்.

அப்போது சுற்றுலா பயணிகள் வனத்தில் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் உயர்ந்த மரங்களுக்கு இடையே சுமார் 100 மீட்டர் நீளத்துக்கு கயிறு மற்றும் மரக்கட்டைகளால் ஆன தொங்கு பாலம் அமைக்கப் பட்டு இருந்தது. அதில், சுற்றுலா பயணிகள் ஏறி நடக்கும் போது தொங்கு பாலம் மேலும், கீழும் அசைவது மகிழ்ச்சியை தருவதாக இருந்தது. அந்த தொங்கு பாலம் கடந்த 2007-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. நாட்கள் செல்ல செல்ல தொங்குபாலம் போதிய அளவில் பராமரிக்கப்பட வில்லை. 

இதன் காரணமாக தற்போது அந்த தொங்குபாலத்தில் மரக்கட்டைகள் உடைந்து நொறுங்கி சிதைந்து, கயிறு மற்றும் கம்பிகள் அறுந்தும் கிடக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு  தொங்கு பாலம் எலும்புக்கூடு போல் உள்ளது. எனவே அதில் சுற்றுலா பயணிகள் ஏறி அசம்பாவிதம் நிகழாமல் இருக்க தடுப்பு ஏற்படுத்தப் பட்டு உள்ளது. இதனால் சிதைந்து காணப்படும் தொங்குபாலத்தை சுற்றுலா பயணிகள் ஏக்கத்துடன் பார்த்து செல்லும் நிலை உள்ளது.

இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, கோவைகுற்றாலம் செல்ல கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அங்கு போதிய வசதிகள் இல்லை. மேலும் அழகிய வனச்சூழலை ரசிக்க வசதியாக இருந்த தொங்குபாலமும் பழுதடைந்து பயன்படாமல் உள்ளது. எனவே மீண்டும் தொங்குபாலம் அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-S.ராஜேந்திரன்.

Comments