கோவை அருகே பெண் ஊழியரிடம் செல்போனில் ஆபாச பேச்சு! - மேலாளரை தாக்கிய பெண்ணின் உறவினர்கள்..!!

 

   -MMH

  கோவை அருகே பெண் ஊழியரிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய பெட்ரோல் பங்க் மேலாளரை, பெண்ணின் உறவினர்கள் தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

கோவை மாவட்டம் காரமடையில் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் காரமடை லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் மேலாளராக செல்வகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பெட்ரோல் பங்கில் பணிபுரியக் கூடிய பெண் ஊழியர் ஒருவருக்கு, செல்வகுமார் தொலைபேசி வாயிலாக ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தனது வீட்டிற்கு ஒரு நாள் வரும்படியும் அந்த பெண்ணை அழைத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலாளரின் இந்த ஆபாச பேச்சு குறித்து அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, பெட்ரோல் பங்க் சென்று மேலாளரிடம் பாலியல் தொல்லை குறித்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியதோடு மேலாளரை சரமாரியாக தாக்கினர். இந்த காட்சியை அங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவரால் படம்பிடிக்கப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

-சுரேந்தர்.

Comments