கோவையில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது! சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்! !

 

  -MMH

  கல்வி மற்றும் அறிவில் சிறந்து விளங்கவும், தொழில் சார்ந்த புது முயற்சிகளுக்கு விஜயதசமி தினம் ஏற்றது என்று கூறப்படுகிறது. எனவே ஆண்டுதோறும் விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்னும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடத்தப்படும்.

அப்போது குழந்தைகளின் நாக்கில் தேன் தடவி தங்க ஊசியால் ஓம் ஹரிஸ்ரீ கணபதியே நம என எழுதப்படும். அத்துடன் குழந்தைகளின் விரலை பிடித்து அரிசியில் எழுத வைப்பார்கள். இதனால் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை ஆகும். 

விஜயதசமியையொட்டி கோவை சித்தாப்புதூரில் உள்ள அய்யப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. 

பூஜைகள் முடிந்த பின்னர் காலை 7 மணிக்கு குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டில் குழந்தைகளின் நாக்கில் ஊசி வைத்து எழுதப்படவில்லை. 

இதற்காக கோவிலுக்குள் இருந்த குரு பண்டிதர்கள் முன் பெற்றோர் தங்கள் குழந்தைகளை மடியில் வைத்தபடி அமர்ந்தனர். அப்போது குரு பண்டிதர்கள் குழந்தைகளின் கை விரலை பிடித்து தாம்பாளத் தட்டில் வைக்கப்பட்டு இருந்த பச்சரிசியில் ஹரி ஸ்ரீ கணபதியே நம என்று எழுதி எழுத்தறிவித்தனர். 

இதில் ஏராளமானோர் தங்களின் குழந்தையுடன் வந்து கலந்து கொண்டனர். இதனால் நிகழ்ச்சி மாலை வரை நீடித்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments