வாகன அதிகரிப்பு மற்றும் போதிய வாகன நிறுத்துமிடம் இல்லாததால் அவதிப்படும் வால்பாறை பகுதி பொதுமக்கள்; நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

 

  -MMH

   திரும்பிய இடம் எல்லாம் பச்சை பசேலென காட்சியளிக்கும் வால்பாறை, 7-வது சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தற்போது லேசான மழை, வெயில் என்று இதமான காலநிலை நிலவி வருவதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

மேலும் பகல் நேரத்தில்கூட தேயிலை  தோட்டத்தில் பனி மூட்டம் நிலவுவதால், இயற்கை சூழலை அனுபவித்து மகிழ சுற்றுலா பயணிகள் பலர் வந்து குவிகிறார்கள். இதனால் இங்குள்ள சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை யும் அதிகரித்து வருகிறது 

இந்த நிலையில் இங்கு வாகனங்களில் வருபவர்களின் கார்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால், சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே நேற்று வால்பாறை நகரில் சாலையோரத்தில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. 

இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த வழியாக சென்றவர்கள் அவதியடைந்தனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

"வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் சிலர் சாலையோரத்தில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

மேலும் அடுத்த வாரத்தில் ஆயுதபூஜை விடுமுறை வருவதால் ஏராளமானோர் இங்கு வர வாய்ப்பு உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க போலீசாரை நிறுத்தி கண்காணிக்க வேண்டும். அத்துடன் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த இடவசதி செய்து கொடுக்க வேண்டும்." இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments